அந்நியச் செலாவணி நிர்வாக சட்டத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மஹுவா மொய்த்ராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.யாக பதவி வகித்தவர் மஹுவா மொய்த்ரா. இவர் பிரதமர் மோடி, தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய மக்களவை நெறிமுறைக் குழு அளித்த பரிந்துரையின் பேரில் அவருடயை மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது.
இதனிடையே, மொய்த்ரா மீது சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. குறிப்பாக அந்நியச் செலாவணி நிர்வாக சட்டத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மஹுவா மொய்த்ராவிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக வரும் திங்கள்கிழமை டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.