மேகேதாட்டு அணைக்கு ஆதரவான தீர்மானத்துக்கு எதிராக அவசர தடை ஆணை பெற சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை ஆணையத்தில் கடந்த பிப்.1-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் மேகேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பெரும்பான்மை அடிப்படையில் அணை கட்டுவதற்கு சாதகங்கள் குறித்து மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டி ருப்பது கண்டிக்கத்தக்கது.
இந்த விவாதத்துக்கு அனுமதிக்க மாட்டோம் என்று தனது கருத்தை பதிவிட்ட தமிழக அரசு, கூட்டத்தை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். இவ்வாறு வெளியேறி இருந்தால் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகம் மேகேதாட்டு அணை கட்டுவதற்கு ஒப்புக் கொண்டதாக கருத்தை பதிவேற்றம் செய்து மத்திய அரசக்கு அனுப்பி இருக்க முடியாது. இதையொட்டி சட்டப்பேரவையில் ஆணையத்தின் தவறைசுட்டிக்காட்டி தீர்மானத்தை நிராகரிக்கக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்?
இனியும் காலம் கடத்தினால் பெற்ற உரிமையை மீண்டும் திமுக அரசு பறி கொடுத்து விடும் நிலை ஏற்படும். எனவே அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் தெரிவித்து அவசர தடை ஆணை பெற சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.