2029-ல் நாட்டை பாஜகவிடம் இருந்து ஆம் ஆத்மி விடுவிக்கும்: அரவிந்த் கெஜ்ரிவால்!

“2029 மக்களவைத் தேர்தலில், நாட்டை பாஜகவிடம் இருந்து ஆம் ஆத்மி விடுவிக்கும்” என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். டெல்லி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த வாக்கொடுப்பில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி 54 எம்எல்ஏகளின் ஆதரவுடன் வெற்றி பெற்றது.

டெல்லி சட்டப்பேரவையில், ஆம் ஆத்மி கட்சியின் 62 எம்எல்ஏக்களில் 54 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்று அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இது குறித்து பேரவையில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “ஆம் ஆத்மி கட்சியில் இருந்து யாரும் விலகவில்லை. இரண்டு எம்எல்ஏக்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு உடல்நிலை சரியில்லை, சிலர் வெளியூரில் உள்ளனர்” என்றார்.

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில் ஆம் ஆத்மிக்கு 62 இடங்களும், பாஜகவுக்கு 8 இடங்களும் உள்ளன. இருப்பினும், ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்து வருவதாகவும், அதன்மூலம் டெல்லி அரசை கவிழ்க்க வாய்ப்புள்ளதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து டெல்லி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை அரவிந்த் கெஜ்ரிவால் கொண்டு வந்தார். இதையடுத்து, டெல்லி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு சந்தித்தது.

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “பாஜகவுக்கு ஆம் ஆத்மி கட்சிதான் மிகப் பெரிய சவாலாக உள்ளது. அதனால்தான் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தாக்குதலைச் சந்திக்கிறது. நீங்கள் என்னைக் கைது செய்யலாம். ஆனால், கெஜ்ரிவாலின் சிந்தனைகளை எப்படி முடிவுக்கு கொண்டு வருவீர்கள்? இந்தப் பேரவையில் எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது என்றாலும், ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயற்சிப்பதால் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தேவையாய் இருக்கிறது. இந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றாலும், 2029-ம் ஆண்டு தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி நாட்டை பாஜகவிடமிருந்து விடுவிக்கும்.

‘21 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து விலக ஒப்புக்கொண்டுள்ளனர். பலர் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் எம்எல்ஏக்களுக்கு பாஜகவில் இணைவதற்காக ரூ.25 கோடி வழங்குவதாக தெரிவித்தனர்’ என்று எங்கள் எம்எல்ஏகளிடம் தெரிவிக்கப்பட்டது. அந்த பேரத்தை எங்கள் எம்எல்ஏக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று என்னிடம் தெரிவித்தனர். மற்ற எம்எல்ஏகளிடம் நாங்கள் பேசும்போது ‘பாஜகவினர் 21 பேரிடம் பேசவில்லை, 7 பேரிடம் மட்டுமே பேசினர்’ என்று தெரியவந்தது. பாஜகவினர் மற்றொரு ஆபரேஷன் தாமரை நடத்த முயற்சி மேற்கொண்டனர்” என்று கெஜ்ரிவால் கூறினார்.