காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் நடவடிக்கையை தடுக்காவிடில் மத்திய மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.
கர்நாடக மாநில சட்டப்பேரவையில் கடந்த 12ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. நேற்று இந்த கூட்டத்தொடரில் உரையாற்றிய சித்தராமையா, “தேவையான அனுமதிகளை விரைவில் பெற்று மேகதாதுவில் அணை கட்டப்படும். அங்கு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. இதற்காக ஒரு தனி மண்டல குழுவும், இரண்டு துணை மண்டல குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. மேகதாது அணை கட்டும் போது நீருக்குள் செல்லும் நிலப்பரப்பு மற்றும் வெட்டப்பட வேண்டிய மரங்களை அடையாளப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளது” என்று கூறியிருந்தார்.
இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சுயமாக சிந்திக்கும் திறனற்ற ஒரு பொம்மை முதலமைச்சரை நம் தமிழகம் பெற்றிருப்பது கொடுமையிலும் கொடுமை. தற்போதைய விடியா திமுக ஆட்சியாளர்கள் தங்களுடைய சுயநலத்திற்காக எதையும் விட்டுக்கொடுப்பார்கள் என்ற எண்ணம் கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் முதலமைச்சர் திரு. சித்தராமையாவிடம் வந்திருப்பது, தமிழக மக்களின் தலையில் இடியாக இறங்கியுள்ளது. காவிரிப் பிரச்சனையாக இருந்தாலும், மேகதாது அணைப் பிரச்சனையாக இருந்தாலும், கர்நாடகத்தை ஆண்ட பாரதிய ஜனதா அரசும், காங்கிரஸ் அரசும் தமிழகத்திற்கு எதிராக செய்த துரோகங்களை அம்மாவின் அரசு அவ்வப்போது அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எதிர்த்தது; தடுத்து நிறுத்தியது.
விடியா திமுக அரசு பதவியேற்ற நாள்முதல், தங்கள் கூட்டாளியான காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தமிழக நலனை காவு கொடுத்து வருவதை அறிக்கைகள் வாயிலாகவும், சட்டசபையிலும் நான் தொடர்ந்து எடுத்துக் கூறி வருகிறேன். குறிப்பாக, 14.2.2024 அன்று சட்டமன்றத்தில் நான், எங்களது ஆட்சிக் காலத்தில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதிக்கும் அதிகாரம் ஆணையத்திற்கு இல்லை என்றும், 2018-ஆம் ஆண்டு மேகதாது அணை குறித்த பிரச்சனை மத்திய நீர்வள கமிஷனின் பார்வைக்குச் சென்றபோது, எனது அரசு 5.12.2018 அன்று மத்திய நீர்வள கமிஷனின் அன்றைய இயக்குநர் மீது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது என்றும், இன்னும் அவ்வழக்கு நிலுவையில் உள்ளது என்றும், எனவே, கடந்த 1.2.2024 அன்று ஆணையத்தின் வரையறுக்கப்பட்ட ‘பணி வரம்புக்கு’ அப்பாற்பட்டு மேகதாது அணை கட்டுவது பற்றிய விவாதத்தை 28-ஆவது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் அனுமதித்ததைக் கடுமையாக எதிர்த்து வெளிநடப்பு செய்யாதது குறித்தும்; ஆணையமும் அதன் அதிகார வரம்பிற்கு சம்பந்தமில்லாத மேகதாது அணை கட்டுவது குறித்த கருத்தை, மத்திய நீர்வள கமிஷனுக்கு (Central Water Commission) பரிந்துரைத்துள்ளது குறித்தும், விடியா திமுக அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன்.
மேலும், உடனடியாக எனது தலைமையிலான அரசு 2018-ஆம் ஆண்டு மத்திய நீர்வள கமிஷன் மீது தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது என்றும், அதனை இந்த விடியா திமுக அரசு தொடர்ந்து நடத்திட வலியுறுத்தியதோடு, தமிழக நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யவும் வலியுறுத்தினேன். ஆனால், இந்த விடியா திமுக அரசு 1.2.2024 அன்று காவிரி மேலாண்மை ஆணையத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து உடனடியாக உச்சநீதிமன்றம் செல்லாமல் காலதாமதம் செய்ததை வசதியாக பயன்படுத்திக்கொண்ட கர்நாடக காங்கிரஸ் அரசு, நேற்று (16.2.2024) கர்நாடக பட்ஜெட்டில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டி, குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த ஒரு தனி திட்டப் பிரிவு மற்றும் இரண்டு உட்பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், இத்திட்டத்தின் கீழ், வனப் பகுதியில் நீரில் மூழ்கும் நிலத்தை அடையாளம் காணும் பணியும், மரங்களை எண்ணும் பணியும் ஏற்கெனவே துவங்கப்பட்டுள்ளது என்றும், உரிய அதிகாரிகளிடமிருந்து தேவையான அனுமதிகளைப் பெற்று பணிகளை விரைந்து துவங்க முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது, உச்சநீதிமன்றத் தீர்ப்பினை வெளிப்படையாகவே மீறுவது நீதிமன்ற அவமதிப்புச் செயலாகும்
இன்னும் எதற்காக இந்த விடியா திமுக அரசு காத்திருக்கிறது என்பது உண்மையிலேயே தமிழக மக்களுக்குப் புரியவில்லை. கருணாநிதி, சர்க்காரியா கமிஷன் விசாரணை மற்றும் நடவடிக்கைக்கு பயந்து காவிரியில் உடன்படிக்கையை நீட்டிக்காமல், கர்நாடகா காவிரியின் குறுக்கே அணைகள் கட்ட அனுமதித்து, தமிழக மக்களை வஞ்சித்ததைப் போல், இன்று விடியா திமுக அரசின் நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர், கர்நாடகாவில் தங்களது குடும்பத் தொழில்கள் பாதிக்கப்படுமோ என்றும், கூட்டணி காங்கிரஸ் உறவுக்காக தமிழகத்திற்கு மீண்டும் ஒரு துரோகத்தை அரங்கேற்ற நினைக்கிறார் என்று தமிழக மக்கள் திமுக மீது கடும் கோபத்துடன் உள்ளனர். இதுகுறித்து பலமுறை நான் அறிக்கைகள் வாயிலாகவும், பேட்டிகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் விரிவாகப் பேசியும், அதற்கு பதில் அளிக்காமல், உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளது தமிழக மக்களுக்கு விடியா திமுக அரசு செய்துவரும் மிகப் பெரிய துரோகமாகும் என்பதை மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை செய்கிறேன்.
ஆணையம் அதன் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டு மேகதாது அணை குறித்த பொருளை (அஜண்டாவை) 28-ஆவது ஆணையக் கூட்டத்தில் எடுத்துக்கொண்டது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு சாதகமாக ஆணையத்தின் தலைவர் அந்தப் பொருளை அனுமதித்ததோடு, அதை மத்திய நீர்வள கமிஷனுக்கு அனுப்பியது மிகப் பெரிய தவறு. இந்த ஆணையக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை கவனமாக அனுப்பிவைத்து அதை எதிர்க்காமல், தமிழகத்திற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுக்க விடியா திமுக அரசு அனுமதித்தது மிகப் பெரிய துரோகமாகும். காவிரி நதிநீர் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால், 20 மாவட்டங்களில் குடிநீர்ப் பிரச்சனை ஏற்படும். டெல்டா மாவட்டங்கள் விவசாயத்திற்கு தண்ணீர் இன்றி பாலைவனமாகும். மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு உடனடியாகப் கைவிட வேண்டும். தவறினால், தமிழகத்திற்கு துரோகத்தை செய்யத் துணியும் கர்நாடக காங்கிரஸ் அரசையும், கைகட்டி வேடிக்கை பார்க்கும் மத்திய, மாநில அரசுகளையும் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களைத் திரட்டி மாபெரும் அறப் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.