வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாக பார்க்கக் கூடியவர் கருணாநிதி: அமைச்சர் உதயநிதி

தோல்வியாக இருந்தாலும் சரி. வெற்றியாக இருந்தாலும் சரி. இரண்டையுமே சரிசமமாக பார்க்கக் கூடியவர் தான் கருணாநிதி என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

மதுரையில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

மதுரை மண்ணில் இந்த வரலாற்று சிறப்புமிக்க அற்புதமான திட்டத்தை தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கருணாநிதி நூற்றாண்டினை சிறப்பித்திடும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 12620 கிராம ஊராட்சிகளுக்கும் ரூ.86 கோடி செலவில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஊராட்சிக்கும் 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்க இருக்கின்றோம். கலைஞருடைய நூற்றாண்டில் அவர் பெயரிலேயே திட்டத்தை துவங்கி வைப்பதில் பெருமை அடைகின்றோம். மகிழ்ச்சி அடைகின்றோம். தமிழ்நாட்டில் விளையாட்டு துறை என்பது நகரம் முதல் கிராமம் வரை எல்லா இடத்திலும் பறந்து விரிந்து இருக்கனும்னு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம். கிராமப்புற விளையாட்டு திறமையாளர்களை கண்டறிய தான் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை சென்ற வருடம் மிகச் சிறப்பாக நடத்தி முடித்தோம். 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் அதில் கலந்து கொண்டார்கள்.

ஏழை எளிய கிராமப்புற விளையாட்டு வீரர்களுக்கு உதவ தான் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கி பல உதவிகளை செய்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இன்றைக்கு இந்த கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்க இருக்கின்றோம். படிப்படியாக தமிழ்நாடு முழுவதும் இந்த ஒவ்வொரு ஊராட்சிக்கும் இந்த திட்டம் போய் சேர இருக்கின்றது. இந்த விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி கிராமங்கள் இருக்கக்கூடிய இளைஞர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும் புத்துணர்ச்சியோடும் இருக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.

கலைஞருடைய பெயரால் எத்தனையோ திட்டங்கள் இருந்தாலும், நம்முடைய விளையாட்டுத் துறை சார்பாக முதல்முறையாக கலைஞர் பெயரால் விளையாட்டுத் துறை திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பது அந்த துறையின் அமைச்சர் என்ற முறையில் நான் மிகுந்த பெருமையடைகின்றேன். மகிழ்ச்சி அடைகின்றேன். கலைஞருக்கு அரசியல்வாதி, இலக்கியவாதி, பேச்சாளர், எழுத்தாளர் என பல முகங்கள் உண்டு. ஆனால் விளையாட்டுக்கும் கலைஞருக்கும் என்ன தொடர்பு. ஏன் அவருடைய பெயரை இத்திட்டத்திற்கு வைத்து உள்ளீர்கள் என சில பேர் கருதலாம். கலைஞர் தன்னுடைய சிறு வயதிலேயே களத்தில் இறங்கி எல்லா விளையாட்டையும் விளையாடியவர்.

அதன் பிறகு தான் அரசியலுக்கு வந்து ஆடுகளத்தில் நுழையாமல் தவிர்த்து வந்தார். ஆனால் கலைஞர் ஒரு ஆர்வமிக்க விளையாட்டு போட்டிகளுடைய ரசிகர். அது கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் சரி. கால்பந்து போட்டியாக இருந்தாலும் சரி. அனைத்து போட்டிகளையும் நெருக்கடியான நேரத்திலும் அந்த போட்டிகளை தொலைகாட்சியில் பார்த்து ரசிபவர் தான் கலைஞர். ஆனால் அதையெல்லாம் விட அவருடைய பெயரை இத்திட்டத்திற்கு சூட்டியதன் காரணம். ஒரு விளையாட்டு வீரருக்கு இருக்கு வேண்டிய அத்தனை குணங்களும் திறமைகளும் கலைஞருக்கு இருந்தது. அது தான் அவருடைய சிறப்பு.

ஒரு விளையாட்டு வீரருக்கு என்னென்ன திறமைகள் வேண்டும். நல்ல எனர்ஜி வேணும். புத்துணர்ச்சி வேணும். நல்ல கூர்மையான அறிவுத்திறன் வேண்டும். தோல்வியிலும் துவண்டு விடாத மன திடம் வேண்டும். இதைவிட முக்கியம் நல்ல டீம் ஒர்க் வேணும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த திறமைகள் அனைத்தும் கலைஞரிடம் இருந்தது. கலைஞருடைய எனர்ஜிக்கு நிகரான எனர்ஜியை நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. வசதிகள் ஏதும் இல்லாத அந்த காலத்திலேயே தமிழ்நாடு முழுவதும் கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் சென்று கழகத்தை வளர்த்தவர் தான் கலைஞர். ஒரே நேரத்தில் அரசியலிலும், சினிமாவிலும், இலக்கியத்திலும் கொடிக்கட்டி பறந்து இருக்கிறார் என்றால் அவர் எவ்வளவு உழைத்திருக்க வேண்டும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். கலைஞருக்கு உள்ள எனர்ஜி ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் இருக்க வேண்டும். ஓயாமல் பயிற்சி எடுக்க வேண்டும். சோர்வு என்பதே கூடாது. கடுமையான முறையான பயிற்சிதான் ஒரு விளையாட்டு வீரனை வெற்றி வீரன் ஆக்கும்.

அடுத்து கலைஞருக்கு இருக்கக் கூடிய கூர்மையான அறிவுத்திறன் என்பது மிக ஆச்சரியமான விஷயம். தான் என்ன செய்ய போகிறோம். அதற்கு பதிலாக எதிரில் இருப்பவர் என்ன சொல்ல போகிறார்கள். அதற்கு என்ன பதில் சொல்லலாம். அதற்கு முன்கூட்டியே யோசித்து செயல்பட கூடியவர் தான் கலைஞர். ஒரு விளையாட்டு வீரருக்கும் அந்த திறமை தேவை. நாம் இப்படி விளையாடினால் நம்முடைய எதிர் அணியினர் எப்படி விளையாடுவார் என்று கணிக்க வேண்டும்.

அடுத்து கலைஞருடைய மன திடம். தோல்வியாக இருந்தாலும் சரி. வெற்றியாக இருந்தாலும் சரி. இரண்டையுமே சரிசமமாக பார்க்கக் கூடியவர் தான் கலைஞர். தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருந்தால் வெற்றி நிச்சயமாக நம்மை தேடி வரும் என்ற மனதிடத்துடன் கடைசி வரை கலைஞர் மக்களுக்காக உழைத்துக்கொண்டே இருந்தார். அதே போன்ற மன உறுதி இங்கே வந்திருக்கும் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் இருக்க வேண்டும்.

கடைசியாக கலைஞருடைய டீம் வொர்க். கூட்டு முயற்சி. அதே மாதிரி தான் விளையாட்டிலும் நல்ல டீமை நீங்கள் உருவாக்கி கொள்ள வேண்டும்.நல்ல டீம் அமைந்து விட்டாலே, பாதி வெற்றி பெற்று விட்டோம் என்று அர்த்தம். கலைஞருடைய பெயரால் வழங்கப்படும் விளையாட்டு உபகரணங்களை பெறக்கூடிய இளைஞர்களே நான் கேட்டுக் கொள்வதெல்லாம். கலைஞர் அவர்களுக்கு இருந்த குணங்களை, அந்த திறமைகளை நீங்களும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இப்போது இங்கு வழங்கக்கூடிய விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி நம் வீரர் வீராங்கனைகள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். சிறந்த திறமையாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களை மேலும் ஊக்குவிக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் வழிவகை செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.