எதிர்க்கட்சியினர் வாரிசுகளுக்காக இயங்குகின்றனர்: அமித் ஷா

“பிரதமர் மோடி தலைமையிலான பாஜக நாட்டின் வளர்ச்சிக்காகவும், காங்கிரஸின் கீழ் இருக்கும் ‘இண்டியா’ கூட்டணி கட்சியினர் தங்களின் குடும்பத்துக்காகவுமே வேலை செய்கின்றனர்” என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்று வரும் பாஜக தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:-

எதிர்க்கட்சியினர் வாரிசு அரசியல் மற்றும் சமாதான அரசியலையே வளர்க்கின்றனர். ‘இண்டியா’ கூட்டணி முழுவதும் 2ஜி, 3ஜி, மற்றும் 4 ஜி கட்சிகளாக நிரம்பியுள்ளன. அந்தக் கட்சிகளை இரண்டாவது, மூன்றாவது, நான்காவது தலைமுறையைச் சேர்ந்த குடும்பத்தினரே நடத்துகின்றனர். பிரதமர் மோடி சமுதாயத்தின் அனைத்து பிரிவின் வளர்ச்சிக்காகவும், உலக அளவில் நாட்டினை மேம்படுத்துவதற்காகவும் பாடுபட்டுள்ளார். மூன்றாவது முறையாக மோடி பிரதமராக ஆட்சியமைப்பார் என்பது குறித்து மக்கள் மனதில் துளியும் சந்தேகம் இல்லை.

பிரதமர் மோடி எழை மக்கள் மற்றும் நாட்டுக்காக யோசித்துக் கொண்டிருக்கையில் சோனியா காந்தி, சரத் பவார், லாலு பிரசாத் யாதவ் மற்றும் மு.க. ஸ்டாலின் போன்றோர் தங்களின் வாரிசுகளை பிரதமராக, முதல்வர்களாக ஆக்குவது பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். சக்தி வாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தான் உயர் பதவிக்கு வர முடியும் என்று அவர்கள் எண்ணுவதால் தான் அனைத்து இளவரசர்களும் பிரதமர் மோடிக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர். ஒருபுறம் பார்த்தால் குடும்பக்கட்சிகள் மற்றொரு புறம் ஏழைத்தாயின் மகன்.

முன்பு வளர்ச்சிப் பணிகளில் விலக்கப்பட்டதாக உணர்ந்த 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக அரசு பாடுபட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகளோ அனைத்தையும் எதிர்க்கும் நிலையில் உள்ளன. சட்டப்பிரிவு 370 ரத்து, முத்தலாக் தடை, குடியுரிமை (திருத்தம்) சட்டம் அல்லது புதிய நாடாளுமன்றம் கட்டுதல் என அனைத்தையும் எதிர்க்கட்சிகள் எதிர்த்துள்ளன. காங்கிரஸ் கட்சி சமாதானப்படுத்தும் அரசியலுக்காவே ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பை நிராகரித்தது. பாஜகவில் குடும்ப அரசியல் இருந்திருந்தால் ஒரு தேநீர் விற்பவரின் மகன் நாட்டின் பிரதமராக ஆகியிருக்க முடியாது. இவ்வாறு அமித் ஷா பேசினார்.