சமூக செயற்பாட்டாளர் நந்தினி ஆனந்தன் புதிய அரசியல் கட்சி தொடங்குகிறார்!

தமிழ்நாட்டில் மதுபான கடைகளுக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து தற்போது வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் பிரசாரம் நடத்தி வரும் சமூக செயற்பாட்டாளர் மதுரையை சேர்ந்த நந்தினி ஆனந்தன் புதிய அரசியல் கட்சியை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

தமிழக அரசு ஊழியராக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர் ஆனந்தன். இவரது மகள்கள் நந்தினி, நிரஞ்சனா இருவரும் சட்டம் படித்தவர்கள். சட்டக் கல்லூரி மாணவராக இருந்த காலம் முதலே பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு எதிரான போராட்டங்களை தந்தை ஆனந்தனுடன் இணைந்து போராடி வருபவர் நந்தினி. மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும், கந்து வட்டி கொடுமையை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து தொடர் பிரசாரத்தை மேற்கொண்டவர் நந்தினி. இதனால் பலமுறை போலீசாரல் கைது செய்யப்பட்டார். குணா ஜோதிபாசு என்ற பொறியியல் பட்டதாரி இளைஞரை நந்தினி ஆனந்தன் ஜாதி மறுப்பு திருமணம் செய்துள்ளார். தற்போது நந்தினி, அவரது கணவர் குணா ஜோதிபாசு, தந்தை ஆனந்தன், தங்கை நிரஞ்சனா ஆகியோர் இணைந்து பல்வேறு சமூகப் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து போராடுகின்றனர்.

வாக்குப் பதிவு இயந்திரங்களை இந்தியாவில் முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என்பதே நந்தினி ஆனந்தன் தற்போது முன்னெடுத்துள்ள போராட்டம். இதற்காக நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று தொடர் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் நந்தினி. வரும் 22-ந் தேதி குஜராத் மாநிலம் தண்டியில் வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார் நந்தினி.

இந்த நிலையில் “2024 பாராளுமன்ற தேர்தல் EVM இல் நடக்கக்கூடாது. வாக்குச்சீட்டில் தான் நடக்க வேண்டும். EVM இல் தேர்தல் நடந்தால் பாஜக மோசடி செய்து ஆட்சியைக் கைப்பற்றி விடும். அப்படி நடந்தால் அதன் பிறகு நாட்டில் ஜனநாயகம், தேர்தல் இதெல்லாம் இருக்காது. எனவே EVMஐ ஒழித்துக் கட்டுவதே நம் முன் உள்ள முதன்மையான கடமை. இந்த முக்கியமான பிரச்சனையை கையில் எடுத்து தீவிரமாக போராடுவதே நமது முதன்மையான நோக்கம்” என்ற அறிவிப்புடன் “97% மக்களுக்கான கட்சி” என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார் நந்தினி ஆனந்தன். மேலும் மக்களுக்கான கட்சி ஒன்று புதிதாக உருவாகும். EVM ஐ ஒழித்துக்கட்டி வாக்குச்சீட்டில் தேர்தல் நடத்த போராடும். மக்களின் ஆதரவோடு அதிகாரத்துக்கு செல்லும், மக்களின் நலனுக்கான ஆட்சியை நடத்தும் எனவும் நந்தினி ஆனந்தன் விளக்கம் அளித்துள்ளார்.