எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களின் படகுகளைக் கொளுத்துவோம்: இலங்கை மீனவர்கள்!

எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களின் படகுகளைக் கொளுத்துவோம் என்று இலங்கை மீனவர்கள் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. வங்கக்கடலில் மீன் பிடிக்கப் போகும் தமிழக மீனவர்கள், எல்லை கடந்து மீன்பிடிக்க வருவதாகச் சொல்லி இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. கடந்த பிப். 4ஆம் தேதி கூட இப்படி தான் இரண்டு விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கச் சென்ற 23 ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தாக சொல்லி கைது செய்யப்பட்டனர். அவர்கள் சமீபத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, இரு படகுகளின் டிரைவர்களாக உள்ள இரு மீனவர்களுக்கு தலா 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொரு மீனவர் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி வந்துள்ளதாகக் கூறி அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மீதமுள்ள 20 மீனவர்கள் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர். இது மட்டுமின்றி அவர்களின் படகுகளையும் நாட்டுடைமையாக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்நாட்டு நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே இலங்கை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும், மீனவர்கள் கைது காரணமாகக் கச்சத்தீவு திருவிழாவையும் புறக்கணிக்கவும் தமிழக மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல, பெருமைமிக்க இந்தியர்கள் என்ற முதல்வர் ஸ்டாலின், அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை இப்படி கைது செய்வது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டு மீனவர்கள் இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், எல்லை தாண்டி வரும் மீனவர்களை 10 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இலங்கை மீனவர்கள், “எந்த காரணம் கொண்டும் இந்த மதம் சார்ந்த நிகழ்வைப் புறக்கணிப்பதைக் காரணமாகச் சொல்லி விடுதலை செய்யச் சொல்வதை ஏற்கவே முடியாது. எங்கள் நாட்டுக் கடற்படை சட்டப்பூர்வமான முறையில் தான் அவர்களைப் பிடித்துள்ளனர். எல்லை தாண்டி வந்ததன் காரணமாகவே அவர்களைக் கைது செய்துள்ளோம். எனவே, அவர்களை எக்காரணம் கொண்டும் விடக்கூடாது என்று இலங்கை அரசுக்கு நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்.

எல்லை தாண்டி நுழையும் அனைத்து மீனவர்களையும் கைது செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாகும். எல்லை தாண்டி வரும் மீனவர்களை 5 முதல் 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும். இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் வருவதை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாங்களே கடலுக்குள் சென்று படகுகளை எரிக்க வேண்டி இருக்கும். இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வருவதைத் தடுக்க வலியுறுத்தி வரும் 20ஆம் தேதி இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட இருக்கிறோம். சம்மந்தப்பட்ட மீனவர்களை இந்திய அதிகாரிகள் நிறுத்தவில்லை என்றால் மிகப் பெரியளவில் போராட்டம் வெடிக்கும்” என்றனர்.