நிச்சயம் கரும்பு விவசாயி சின்னத்தைப் பெறுபோம்: சீமான்!

நாம் தமிழர் கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே எங்கள் சின்னத்தை மற்ற கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது என்றும், நிச்சயம் கரும்பு விவசாயி சின்னத்தைப் பெறுபோம் என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி தொகுதி பங்கீடு வரை தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றன. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துவிட்டது. தமிழ்நாட்டில் சில நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களையே அறிவித்துவிட்டார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதன்மூலம் வேட்பாளர்கள் பெயருடன், கரும்பு விவசாயி சின்னத்திற்கு ஓட்டு கேட்டு, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை முதல் கட்சியாக நாம் தமிழர் கட்சி தொடங்கிவிட்டது.

தமிழ்நாட்டில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தேர்தல் களத்தில் போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சி, முதலில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. அதன்பிறகு, 2019 லோசபா தேர்தல் தொடங்கி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது. இந்த லோக்சபா தேர்தலிலும், கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட தயாராகி வருகிறது. ஆனால், இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா என்ற கட்சிக்கு தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்ட அக்கட்சி, இம்முறை தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் அக்கட்சி போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், ஒவ்வொரு தேர்தலிலும் தங்களுக்கு எந்த சின்னம் வேண்டுமோ, அதை தேர்தல் ஆணையத்திடம் கேட்டு பெற வேண்டும். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி கேட்டு பெற இருந்த கரும்பு விவசாயி சின்னத்தை வேறு ஒரு கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதால், நாதகவுக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்கான களப்பணிகள் உள்ளிட்டவற்றைத் திட்டமிட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை அண்ணா நகரில் நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்திற்கு முன்னதாக சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய சீமான், “தேர்தல் சட்ட வரைமுறையின்படி கரும்பு விவசாயி சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு தரப்பட்டிருக்க வேண்டும். திட்டமிட்டு கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டு இருக்கிறது. ஏர் உழும் சின்னம், வண்டிச் சக்கரம் சின்னம் கேட்டபோது, அந்த சின்னங்களை மாநில கட்சிகளுக்கு கொடுத்துள்ளோம் உங்களுக்கு தரமுடியாது என்றார்கள். இப்போது பக்கத்து மாநிலத்தில் புதிதாக தொடங்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ளனர். எனக்கு நெருக்கடி தரவேண்டும் என்பதற்காக வேறு ஒருவருக்கு திட்டமிட்டு இந்த சின்னத்தை ஒதுக்கியுள்ளனர். 6 தேர்தல்களில் இந்த சின்னத்தில் போட்டியிட்டுள்ளோம். எங்கள் மாநிலத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எங்களுக்கான சின்னத்தை ஒதுக்கவேண்டும். மற்ற மாநிலங்களில் நாங்கள் போட்டியிட்டாலும் அப்போது வேறொரு சின்னத்தை அளிக்கலாமே தவிர, இங்கு எங்களுக்கான கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கவேண்டும் என தேர்தல் ஆணையத்தில் பேசி வருகிறோம். தேர்தல் ஆணையம் ஏற்காவிட்டால் நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். நிச்சயமாக விவசாயி சின்னத்தை பெறுவேன்” எனத் தெரிவித்துள்ளார் சீமான்.