இனி திராவிட முன்னேற்றக் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ்த்தாய் வாழ்த்துடன்தான் தொடங்கும் என தமிழக அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையின் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை முழுவதும் வாசிக்காமல் புறக்கணித்தார். உரையில் அரசின் சாதனைகள் குறித்து இடம்பெற்ற அறிவிப்புகள் எதையுமே ஆளுநர் வாசிக்காமல் உரையை நிறுத்தினார். இதன் காரணமாக சபாநாயகர் அப்பாவு ஆளுநரின் முழு உரையையும் வாசித்தார். கூட்டத்தின் இறுதியில் தேசிய கீதம் ஒலிக்கப்படும் நிலையில் அதற்கு முன்னரே ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து வெளியேறினார். ஆளுநரின் செயலுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் இது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. அதில் பல்வேறு காரணங்கள் குறிப்பிடப்பட்டிருந்ததோடு, தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும் என்றும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், முடிவிலும் அதை இசைத்திட வேண்டும் என்ற ஆளுநரின் கோரிக்கையை தமிழக அரசு புறக்கணித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பொதுவாக தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள் தொடங்கி பள்ளி நிகழ்ச்சிகள் வரை அனைத்திலும் நிகழ்ச்சி தொடங்கும்போது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதேபோல் நிகழ்ச்சி முடியும்போது தேசிய கீதம் பாடப்படும். தமிழ்நாடு சட்டசபையிலும் இதுவே மரபாக இருக்கிறது. சட்டப்பேரவை நிகழ்வு தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவடையும் போது தேசிய கீதம் இசைக்கப்படுவது தான் தமிழக சட்டப்பேரவையின் நீண்டகால மரபு. இந்த நிலையில்தான் ஆளுநர் ரவி இந்த விதியை மாற்றும்படி கோரிக்கை வைத்து, அதனை தமிழக அரசு நிராகரித்துள்ளது.
இந்நிலையில் தான் இன்று ராமநாதபுரத்தில் நடந்த ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ எனும் பொதுக்கூட்டம் தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயாளருமான உதயநிதி ஸ்டாலின், இனி எல்லா திமுக நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் எனத் தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு என்று பேரறிஞர் அண்ணா அன்றே கூறினார். ஆளுநர் சமீபத்தில் தேசிய கீதம் தொடர்பாக சர்ச்சையைக் கிளப்பினார். அதனால் இன்று இந்தக் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படும். இனி அரசு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி திராவிட முன்னேற்றக் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ்த்தாய் வாழ்த்துடன்தான் தொடங்கும். தேசிய கீதம் நமக்கு முக்கியம். அது போல தமிழ்தாய் வாழ்த்தும் நமக்கு முக்கியம். எழுதிக் கொடுப்பதை படிக்க வேண்டியதுதான் ஆளுநருடைய பொறுப்பு. அவர் ஒன்றும் மக்கள் பிரதிநிதி கிடையாது. குடியரசுத் தலைவர் கூட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் ஆளுநர் என்பவர் நியமிக்கப்பட்டவர். கடந்த ஆண்டு இதே ஆளுநர் என்ன செய்தார்? நாம் எழுதிக் கொடுத்த உரையில் இருந்த பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர்களை தவிர்த்து விட்டார். அதன் பிறகு தமிழ்நாட்டின் பெயரை தமிழகம் என்று மாற்ற வேண்டும் என்றார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் எதிர்ப்பு தெரிவித்த பிறகு இரண்டே நாளில் பல்டி அடித்து மன்னிப்புக் கோரினார்.
புதிய கல்விக் கொள்கையில் 8ஆம் வகுப்பு, 5ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்கிறார்கள். நமது குழந்தைகள் படிக்கக் கூடாது என புதிய தேர்வுகளை திணிக்கிறார்கள். ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்திற்கு நீட் தேர்வு வரவில்லை. அவர் தமிழகத்திற்குள் நீட் தேர்வை நுழையவிடவில்லை. நீட் விவகாரத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும். அவர் மறைந்ததும் திருட்டுத்தனமாக மத்திய அரசான பாஜகவுக்கு அஞ்சி அதிமுக ஆட்சியில்தான் நீட் தேர்வு தமிழகத்திற்குள் கொண்டு வரப்பட்டது. நீட் தொடர்பாக அனிதா முதல் ஜெகதீசன் வரை 21 பேர் தற்கொலை செய்துள்ளனர். நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக டெல்லியில் போராட்டம் நடத்த இருக்கிறோம். தமிழகத்தில் இருந்து என்றைக்கு நீட் தேர்வுக்கு விலக்கு ஏற்படுமோ அதுதான் முதல் வெற்றி. இவ்வாறு அவர் கூறினார்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற கூட்டம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், “நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, “உரிமைகளை மீட்கத் தலைவரின் குரல் – பாசிசம் வீழட்டும் – இந்தியா வெல்லட்டும்” எனும் தலைப்பில் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கான மாபெரும் பரப்புரைக் கூட்டத்தில் இன்று பங்கேற்றோம். தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் ஏற்காத கொள்கை எதிரிகளுக்கான பதிலடியாக, தமிழ்நாட்டை மட்டுமல்லாது இந்தியாவையும் காப்பாற்றுவதற்கான இக்கூட்டத்தை, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கினோம். மொழி உரிமை – நிதி உரிமை – கல்வி உரிமை என ஒவ்வொரு உரிமையாகப் பறித்து வரும் பாசிஸ்ட்டுகளையும், உரிமைகளை தாரைவார்த்த அடிமைகளையும் வீழ்த்துவதற்கான ஜனநாயக வாய்ப்பே இந்த மக்களவைத் தேர்தல் என்று உரையாற்றினோம். வலிமையான மாநிலங்கள் வேண்டும் என்னும் நம்முடைய லட்சிய வேட்கையோடு, மாநிலங்களை இல்லாமல் செய்யத்துடிக்கும் பாசிஸ்ட்டுகளை வீழ்த்துவதற்கான உறுதியை மத நல்லிணக்கத்துக்கு பெயர் போன இராமநாதபுரத்தில் ஏற்றோம். பாசிசம் வீழட்டும் – இந்தியா வெல்லட்டும்!” எனத் தெரிவித்துள்ளார்.