பாஜகவில் சேருபவர்கள் பொண்டாட்டியை பத்திரமா பாத்துக்குங்க: ஆ ராசா பேச்சால் சர்ச்சை!

பாஜகவில் சேருபவர்கள் தங்களின் மனைவியை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் திமுக துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ ராசா பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமாள் கோயில்களில் சுண்டல் வாங்கி சாப்பிட்டுவிட்டு திமுககாரர்களை இந்துக்களுக்கு எதிரி போல் காட்டுவதாகவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் திமுக தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. அந்த வகையில் மதுரை அண்ணாநகர் பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான பாஜகவைவும் மத்திய அமைச்சர்களையும் கடுமையாக சாடினார். அவர் பேசியதாவது:-

தூத்துக்குடி, சென்னை, திருநெல்வேலியில் மழை வெள்ளத்தில் எத்தனை பேர் இறந்தார்கள் எவ்வளவு வீடுகள் காணாமல் போனது எவ்வளவு பயிர்கள் நாசமனது. ஹெலிகாப்டரில் வந்தார்கள், மாமி நிர்மலா வந்தார், கனிமொழி கைய புடிச்சு குலுக்கினார். நான் கூட கனிமொழியிடம் நிறைய பணம் வாங்கிட்டீங்களா என கேட்டேன். தூத்துக்குடிக்கு எதுவும் ஸ்பெஷலா இருக்கா என்று கேட்டேன். பெண் என்றால் பேயும் இறங்கும் என்று சொல்வதை உண்மை என நினைத்து கனிமொழியை கொண்டு நிர்மலா இறங்கும் என எதிர்பார்த்தேன். அது தண்ணீரில் கூட இறங்காமல், அப்படியே தரையில் வந்து டாடா காமித்து விட்டு சென்றுவிட்டது. இந்த அம்மா அக்கரசல் பொங்கல், பெருமாள் கோவிலில் சுண்டல் வாங்கி சாப்பிட்டுவிட்டு நாங்களும் இந்துக்கள் தான் என்று கூறி கொள்கிறார். எங்களை இந்துக்கள் எதிரியை என்று கூறுகிறார்கள்.

இந்துக்களை படிக்கவிடாமல் வைத்திருந்தது அவர்கள்தான், நாங்கள் இந்துக்களுக்கெல்லாம் விரோதி என பூச்சாண்டி காட்டுகிறார்கள். மணிப்பூரிலும் கோவாவிலும் ஜெயிக்காமலேயே ஆட்சி அமைக்கிறார்கள். என் ஜனநாயகத்தை பற்றி பேசுவதற்கு மோடிக்கு எந்த தகுதியும் இல்லை. வெற்றி பெற்று வருபவனை விலைக்கு வாங்குகிறீர்கள். அதுவா ஜனநாயகம்.

வேதனையோடு சொல்கிறேன், பாஜகவில் சேருபவர்கள் முதலில் பொண்டாட்டியை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அண்ணன் தம்பியை பிரிக்கிறார்கள், மகனை பிரிக்கிறார்கள். பயமாக உள்ளது. அஜித் பவர் மீது 70 ஆயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டு கூறி அமலாக்கத்துறையும் வருமானவரித்துறையும் நெருக்கடி கொடுத்தது. அதை தாங்க முடியாமல் பாஜகவில் இணைகிறார். அவருக்கு உடனே அமைச்சர் பதவி கொடுக்கிறார்கள்.

வாஷிங் பவுடர் விளம்பரத்தில் அழுக்கு துணியை மிஷினுக்குள் போட்டால் வெளியில் வெள்ளையாக வருவது போல எவ்வளவு பெரிய ஊழல்வாதியாக இருந்தாலும் பாஜக என்ற மிஷினுக்குள் சென்று விட்டால் வெளியில் வெள்ளையாக வந்துவிடலாம். இப்படி ஒரு மோடி மஸ்தான் வித்தையை கண்டுபிடித்த வித்தைக்காரர் தான் நரேந்திர மோடி. இந்த ஆட்சியில் நடக்கும் அயோக்கியத்தனம் அவலம் போல இதுவரை இல்லை. இவ்வாறு திமுக எம்பி ஆ ராசா விமர்சனம் செய்தார்.