முஸ்லிம் திருமண சட்டத்தை ரத்து செய்த அசாம் அரசு: ஜவாஹிருல்லா கண்டனம்!

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் 1935 ஐ நீக்கத் திட்டமிட்டு இருக்கும் அசாம் மாநில பாஜக அரசுக்குக் கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்வதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளதாவது:-

பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று நித்தம் அசாம் மக்கள் மனதில் பதற்றத்தை உருவாக்கி வருகிறார் அம்மாநில பாஜக அரசின் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா ஷர்மா. நேற்று அவரது தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில், முஸ்லிம் மக்களைக் குறிவைத்து, 1935 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் கொண்டுவரப்பட்ட முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம் 1935 ஐ நீக்குவதாக அறிவித்து உள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அசாம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் என்பது காலங்காலமாக முஸ்லிம் மக்களின் திருமணங்கள் மற்றும் விவாகரத்தை அங்கீகரித்து வந்த சட்டமாகும். இந்தச் சட்டத்தின் படி, நியமிக்கப்படும் பதிவாளர், திருமணங்களையும் விவாகரத்து போன்ற தகவல்களைப் பதிவேட்டில் பதிவு செய்து நிர்வகித்து வருவார். தற்போது, அசாம் பாஜக அரசு, அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, அத்தகைய 94 பதிவாளர்களின் பதிவேட்டை கையகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது முஸ்லிம் மக்களை வஞ்சிக்கும் அப்பட்டமான செயல் ஆகும். மேலும், அத்தகைய பதிவாளர்களின் பதவியை முற்றிலும் ஒழிக்கவும், இழப்பீடாக 2 லட்சத்தை அவர்களின் மறுவாழ்வுக்கு வழங்கப்படும் என அறிவித்து உள்ளது.

அசாமில் இனி முஸ்லிம்கள் தமது திருமணத்தைச் சிறப்புத் திருமணச் சட்டத்தின் அடிப்படையிலேயே பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவோம் எனத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, இந்தியாவின் கவனத்தைத் தன்பால் ஈர்க்க, நித்தம் புதிய நாடகத்தை அசாம் முதல்வர் பிஸ்வா அரங்கேற்றி வருகிறார். பெரும்பான்மை மக்களின் மத்தியில், இந்த முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை வைத்து வெறுப்பு உணர்வை விதைக்கும் வேலையை இன்று பட்டவர்த்தனமாகச் செய்திருப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான வெளிப்படையான பாசிசமாகும். இந்தப் பாசிச நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். அசாம் அரசின் இந்தப் பாசிச நடவடிக்கையை முறியடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.