சென்னை மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகங்களில் நிலவும் நிதிப் பற்றாக்குறையினை போக்கிடும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப்.25) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
இளைய சமுதாயத்தினருக்கு அறிவு, ஒழுக்கம், உயர் கல்வி ஆகியவற்றை தரக் கூடியவையாகவும், ஆய்வினை மேற்கொள்ளக் கூடியவையாகவும், பொது நலப் பணிகளில் மாணவ, மாணவியரை ஈடுபடுத்தக் கூடியவையாகவும், வேலைவாய்ப்பினை உருவாக்கித் தரக் கூடியவையாகவும் விளங்குபவை பல்கலைக்கழகங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இளைய சமுதாயத்தினரின் விடிவெள்ளியாக விளங்குபவை பல்கலைக்கழகங்கள். இப்படிப்பட்ட பல்கலைக்கழகங்களே பாதிக்கும் சூழ்நிலை கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் உருவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்குவது மதுரை காமராசர் பல்கலைக்கழகம். கடந்த இரண்டு மாதங்களாக அங்கு பணியாற்றும் அலுவலர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் கூட வழங்கப்பட முடியாத அவல நிலை நிலவுவதாகவும், இதனைக் கண்டித்து கடந்த பத்து நாட்களாக அனைத்துத் துறை அலுவலகங்களையும் பூட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராடி வருவதாகவும், ஏற்கெனவே நிதிப் பற்றாக்குறையை சுட்டிக்காட்டி நூற்றுக்கணக்கான தற்காலிக ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதாகவும், தற்போது நடைபெறும் போராட்டம் காரணமாக மாணவ, மாணவியரின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவ, மாணவியருக்கான சான்றிதழ் வழங்கும் பணிகள் முடங்கிப் போயுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
மொத்தத்தில், மாதச் சம்பளமும், ஓய்வூதியமும் வழங்க இயலாத நிலைக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சென்றுள்ளது. இதேபோன்று, சென்னை பல்கலைக்கழகத்திற்கு தரவேண்டிய 51 விழுக்காடு நிதியில், 20 விழுக்காட்டிற்கும் குறைவான நிதியை மட்டும் திமுக அரசு விடுவித்துள்ள நிலையில், பிப்ரவரி மாத சம்பளமே கொடுக்க முடியாத சூழ்நிலை சென்னை பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்டுள்ளது. தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இவையெல்லாம் எடுத்துக்காட்டுகள். ஊதியத்தைக் கூட கொடுக்க இயலாத அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.
ஆவின் நிறுவனத்தில் குளறுபடி, அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் குளறுபடி, அரசு போக்குவரத்துக் கழகங்களில் குளறுபடி, பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் குளறுபடி என்ற வரிசையில் தற்போது சென்னை மற்றும் மதுரை காமராஜ் பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றின்மூலம், கல்வியில் அக்கறை இல்லாத அரசாக தி.மு.க. அரசு விளங்குகிறது என்பது தெளிவாகிறது. இதே நிலைமைதான் மற்ற பல்கலைக்கழகங்களிலும் நீடிப்பதாக தகவல்கள் வருகின்றன. பல்கலைக்கழகங்களுக்கான பல்வேறு கட்டணங்கள் கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் உயர்த்தப்பட்டும், நிதி நிலைமை மோசமாக இருப்பது வேதனைக்குரிய செயல்.
பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளதாக தனக்குத் தானே கூறிக்கொள்ளும் திமுக அரசு, எதிர்கால மாணவ, மாணவியரை உருவாக்கும் பல்கலைக்கழகங்களை மோசமான நிதிநிலைமைக்கு தள்ளியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. ஒரு வேளை அனைத்தையும் அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்வதுதான் ‘திராவிட மாடல்’ போலும். சென்னை மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகங்களில் நிலவும் நிதிப் பற்றாக்குறையினை போக்கிடும் வகையில், உரிய நிதியையும், மானியத்தையும் உடனடியாக வழங்கி, அங்குள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மாதந்தோறும் சம்பளம் பெறவும், ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியத்தை பெறவும், மாணவ, மாணவியர்கள் பாதிப்பிலிருந்து விடுபடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று முதல்வரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.