மக்களவை தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை: சீமான்!

மக்களவை தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய சீமான் கூறியதாவது:-

மக்களவை தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை. தனித்து போட்டி என்று ஏற்கனவே நாங்கள் அறிவித்துவிட்டோம். எனினும், கூட்டணி அமைக்க சிலர் எங்களிடம் பேசியது உண்மைதான். ரகசியமாகப் பேசினார்கள். அவர்கள் ரகசியமாகப் பேசியதை பொதுவெளியில் சொல்வது மாண்பாக இருக்காது. கூட்டணி பேசியதை எல்லாம் எங்கள் மன்னார்குடியில் கூப்பிட்டார்கள், மாயவரத்தில் கூப்பிட்டார்கள் என பொதுவெளியில் சொல்லிக்கொண்டா இருக்க முடியும்.

வாக்கு இயந்திரத்தில் தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. இந்தியா, நைஜீரியா, வங்கதேசம் தவிர உலகின் எந்த நாடுமே வாக்கு இயந்திரங்கள் முறையை பயன்படுத்தவில்லை. அதிலும் கடந்த தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திர முறையை வங்கதேசம் கைவிட்டுவிட்டது. ஆனால், ஊழலில் பெருத்து திளைத்த நாடுகள் இந்தியாவும் நைஜீரியாவும். வாக்குப் பதிவு இயந்திரத்தை தயாரித்து தரும், ஜப்பானே அந்த இயந்திரத்தை பயன்படுத்துவதில்லை. ஏன் அமெரிக்காவே இதை பயன்படுத்துவதில்லை. வாக்குப்பதிவு முடிந்தபின் குறைந்தது 40 நாட்களுக்கு வாக்கு இயந்திரங்கள் மையங்களில் பூட்டிக்கிடக்கும். இப்படியான நிலையில்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் எனக் கூறுகிறார்கள். நான் இங்கு பேசுவதை டெல்லியில் இருந்து உங்களால் ஒட்டுக் கேட்க முடியும் என்றால், வாக்குப் பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியாதா என்ன?. தேர்தல்களே நேர்மையான முறையில் நடக்கவில்லை என்றால் நேர்மையான ஆட்சி எங்கிருந்து நடைபெறும்?. இவ்வாறு அவர் கூறினார்.