தேனியில் டிடிவி தினகரனுடன் இணைந்து பொதுக்கூட்டம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் வேட்பாளர்கள் அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்வோம் என சபதம் போட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2022ஆம் ஆண்டு நீக்கப்பட்டார். எனினும், தன்னை நீக்கியது செல்லாது எனவும், அதிமுக ஒருங்கிணைப்பாளராகவே தொடர்வதாகவும் கூறி செயல்பட்டு வந்தார் ஓபிஎஸ். ஓபிஎஸ் தரப்பு அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை கோரி ஈபிஎஸ் தரப்பு நீதிமன்றம் சென்ற நிலையில், உயர் நீதிமன்றம், ஓபிஎஸ் கட்சி கொடி, சின்னத்தை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்தது. இதனால் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் ஓபிஎஸ் தரப்பு செயல்பட்டு வருகிறது. மேலும், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் ஓ.பன்னீர்செல்வம் மிகுந்த நெருக்கம் காட்டி வருகிறார். வருகிற மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து, டிடிவி தினகரனும் ஓபிஎஸ்ஸும் போட்டியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், தேனி மாவட்ட அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு தேனியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி எம்.பி ரவீந்திரநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
தேனியில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டம் மாநில மாநாடு போல் நிரம்பி இருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்த கூட்டம் போல் இங்கு தொண்டர்கள் ஒருங்கிணைந்து வந்துள்ளனர். அதிமுக-வின் உண்மை தொண்டர்கள் எல்லோரும் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட வேண்டும். எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி விதிகளை மீறி போலி பொதுச் செயலாளர் ஆன எடப்பாடி பழனிசாமி என்கிற நரி இந்தக் கட்சியை கபளீகரம் செய்தார். நான்கரை ஆண்டுகள் கொள்ளையடித்த பணத்தை சுற்றி இருப்பவர்களுக்கு கொடுத்து பொதுச்செயலாளர் பதவியை பெற்றார். பழனிசாமி ஊர்ந்து ஊர்ந்து சென்று சசிகலா காலில் விழுந்து பதவி பெற்றார் என்பதுதான் நாடறிந்த உண்மை. இவ்வளவு பெரிய பதவியை உனக்கு தந்த சசிகலாவைப் பற்றி நீ சொன்ன வார்த்தைகள் நியாயம் தானா? அப்படியென்றால் நீ எவ்வளவு பெரிய ராஜ துரோகி. துரோகி எடப்பாடி பழனிசாமியை அரசியலை விட்டே விரட்டியடிக்க வேண்டும். அதற்காக தான் டிடிவி தினகரன் அமமுகவை தொடங்கினார். நாங்களும் அதே கொள்கையோடு மாவட்டம் வாரியாக கூட்டம் நடத்துகிறோம். எடப்பாடி பழனிசாமி நிறுத்தும் வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்வோம். அவரை எந்த தேர்தலிலும் வெற்றி அடைய விடமாட்டோம். ராஜ துரோகி பழனிசாமியிடம் இருந்து அதிமுகவை மீட்டு தொண்டர்களிடம் ஒப்படைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.