தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக திமுக நிரூபித்தால் அரசியலைவிட்டு விலகத் தயார்: அண்ணாமலை

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியதாக திமுக நிரூபித்தால், நான் அரசியலை விட்டு விலகத் தயார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நேற்று நடைபெற்றது. வில்லாபுரம் சந்திப்பில் தொடங்கி, ஜீவா நகர் வரை பாத யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை, பொதுமக்களிடையே பேசியதாவது:-

திராவிட அரசியலை வேரோடு அழிக்கும் தேர்தல், வரும் மக்களவைத் தேர்தலாகும். மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வருவார் என்று குழந்தைக்குக்கூட தெரியும். 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றிபெறும். தமிழக அரசியலைச் சுத்தம் செய்து, சாமானியர்களுக்கான அரசியலைக் கொண்டுவர, குடும்ப, ஊழல், அராஜக ஆட்சியை அகற்றவேண்டும். அடுத்த 80 நாட்களுக்கு மோடிபோல பாஜகவினர் சுறுசுறுப்பாக வேலை செய்தால், தமிழகத்தில் அவரது கனவு நிறைவேறும்.

இந்த 10 ஆண்டுகளில் தமிழ்மொழி, கலாச்சாரத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்றுள்ளார் பிரதமர் மோடி. அவர் இந்தியாவை ஒருங்கிணைத்து வருகிறார். ஆனால், திமுகவினர் வடக்கு, தெற்கு என பிரிவினை பேசி வருகின்றனர். 90 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக முதல்வர் கூறி வருகிறார். அவர்கள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதை நிரூபித்தால், நான் அரசியலை விட்டு விலகத் தயார். இலவச வேட்டி, சேலையில் பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ள திமுகவினர், அதிலிருந்து தப்ப முடியாது. ஊழல் செய்யும் குடும்பங்கள் அரசியலில் இருக்கக் கூடாது என்பதற்கான வேள்வியை பாஜக நடத்துகிறது.

பங்காளி (அதிமுக) கட்சியினர் என்னை பூச்சாண்டி, மாயாண்டி என்பதால் எனக்கு வருத்தமில்லை. பழனிசாமியைபோல, திருநீற்றை அழித்துவிட்டு, எஸ்டிபிஐ நடத்திய மாநாட்டில் நான் பங்கேற்கவில்லை. 2024 மக்களவைத் தேர்தல் நமக்கான தேர்தல். மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.