ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரயில் விபத்தில் சிக்கி 12 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரயில் விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜம்தாராவில் உள்ள கலாஜாரியா ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென ரயில் பெட்டிகளில் தீப்பிடித்துள்ளது. இதனையடுத்து பயணிகள் தண்டவாளத்தில் குதித்துள்ளனர். அப்போது எதிரே வந்த ரயில் மோதியதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் ரயில்வே அதிகாரிகள் இறப்பு எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை. இந்த விபத்து ஜார்க்கண்ட் மாநிலம் மட்டுமல்லாது நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்திற்கு காங்கிரஸின் ஜம்தாரா தொகுதி எம்எல்ஏ இர்பான் அன்சாரி நேரில் சென்று, விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்க உதவி வருகிறார். இது குறித்துப் பேசிய அவர், “விபத்து குறித்து கேள்விப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நான் நேரில் வந்திருக்கிறேன். மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்து தொடர்பாக சட்டமன்றத்தில் நிச்சயம் கேள்வி எழுப்பப்படும்” என்று கூறியுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் தொடங்கியுள்ளன. பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவர்களது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சமீப காலமாக ரயில் விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ரயில்வே துறைக்கு போதுமான அளவு நிதி ஒதுக்காததுதான் இந்த விபத்துகளுக்கு காரணம் என்றும் அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஜார்க்கண்ட்டில் மற்றுமொரு கோர விபத்து ஏற்பட்டிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.