எம்ஜிஆர், ஜெயலலிதா மீதான பிரதமர் மோடியின் புகழாரத்துக்கு தேர்தலே காரணம்: செல்லூர் ராஜு

“தேர்தலை மனதில் வைத்தே எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார் என நினைக்கிறேன்” என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை பாராட்டி பேசியிருந்தது தற்போது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது:-

தமிழகத்தில் திராவிட இயக்கங்கள்தான் பல ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வருகின்றன. ஒட்டுமொத்த 70 வருட திராவிட ஆட்சிகளில்தான் தமிழகம் பின்னோக்கி சென்று விட்டது என்று தெரிவிக்கிறார் பிரதமர் மோடி. அதோடு தமிழகம் வளர்ச்சி பாதையில் வர வேண்டும் என்றால் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று பிரதமர் மோடி கூறுகிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. அது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து நடவடிக்கை எடுத்தார். இதன் அடிப்படையில்தான் பொருளாதாரத்தில், இந்தியாவில் மிகச் சிறந்த மாநிலமாக தமிழகம் இருக்கிறது. திமுக ஆட்சி காலத்தில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது, உத்தரப் பிரதேசம் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. அதிமுக ஆட்சி, கட்டமைப்பு வசதியில் 31 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும், எம்ஜிஆரையும் பிரதமர் மோடி பாராட்டி வாழ்த்தியிருக்கிறார். தேர்தலுக்காக அவர் இவ்வாறு வாழ்த்தியிருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன்.

அண்ணாமலையால் தான் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான உறவில் முதன்முதலாக பிரிவு ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பிரிவுக்கு பிள்ளையார் சுழி போட்டது அண்ணாமலைதான். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி இழிவாக பேசுகிறார். மேலும் அவர், ‘என்னுடைய மனைவி, அம்மாவை (முன்னாள் முதல்வர் ஜெயலலிதா) காட்டிலும் 100 மடங்கு ஆற்றலில் சிறந்தவர். என்னுடைய தாய் ஆயிரம் மடங்கு சிறந்தவர்’ என்று அண்ணாமலை திருவாய் மலர கூறினார். 70 ஆண்டு கால ஆட்சியில் தமிழகம் பின்னோக்கி சென்றுவிட்டது, இதை மாற்ற வேண்டும் என அண்ணாமலை கூறினார். ஆனால் அவருடைய தலைவர் பிரதமர் மோடி அம்மாவுடைய ஆட்சி சிறந்தது என்று கூறியிருக்கிறார். எம்.ஜி ஆர், ஜெயலலிதா மக்களுக்கான திட்டங்களை வழங்கி இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமியையும் ஏற்கெனவே பாராட்டியிருக்கிறார். தம்பி அண்ணாமலை இதையெல்லாம் கேட்டாவது திருந்துவாரா என்று பார்ப்போம்.

மறைந்த தலைவர்களைப் பற்றி இழிவாக பேசக் கூடாது. அண்ணாவைப் பற்றியும், பெரியாரைப் பற்றியும் அண்ணாமலை இழிவாகப் பேசுகிறார். இது மாதிரி பேச்சு இவருடைய வயதுக்கு சரியல்ல. அரசியலில் இவர் இன்னும் பக்குவப்படவில்லை. அகில இந்திய பாரதிய ஜனதா தலைமை, இது குறித்து அண்ணாமலைக்கு சொல்லி கொடுக்க வேண்டும். இல்லையென்றால், தமிழக மக்கள் என்றைக்கும் பாஜகவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறு செல்லூர் ராஜு கூறினார்.