மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி நேற்று இரவு சுவாமி தரிசனம் செய்தார்.
மதுரை அருகேயுள்ள வீரபாஞ்சானில் நேற்று மாலை நடைபெற்ற, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்கள் டிஜிட்டல் செயலாக்க திட்டக் கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசினார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டுஇரவு 7.05 மணிக்குப் புறப்பட்ட பிரதமர் மோடி, அங்கிருந்து மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றார். அம்மன் சந்நிதி வழியாக இரவு 7.32 மணிக்கு கோயிலுக்கு வருகை தந்தார். அப்போது, பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்திருந்தார்.
பிரதமரை, கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், சிவாச்சாரியார்கள் வரவேற்றனர். கோயில் நிர்வாகம் சார்பில் பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அம்மன் சந்நிதி, சுவாமி சந்நிதி, பொற்றாமரைக்குளம் மற்றும் பிரகாரங்களில் சுமார் அரை மணி நேரம் தரிசனம் செய்த பிரதமர், இரவு 8.02 மணிக்கு தரிசனத்தை முடித்துக்கொண்டு அம்மன் சந்நிதி வழியாகவே கோயிலிலிருந்து வெளியே வந்தார். அப்போது அங்கிருந்து பொதுமக்களைப் பார்த்து கையசைத்த பிரதமர், காரில் பசுமலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்குப் புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடி வருகையையொட்டி மதுரை நகரில் 5 அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோயிலைச் சுற்றியுள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள் பாதுகாப்பு கருதி அடைக்கப்பட்டிருந்தன.
இதனிடையே, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கோயிலில் சாமி தரிசனம் செய்ததை பாக்கியமாக உணர்வதாக பதிவிட்டுள்ளர். மோடி தமிழில் வெளியிட்டுள்ள பதிவில், “மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்ததை பாக்கியமாக உணர்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அம்மன் சன்னதி வாசல் வழியாக பிரதமர் மோடி வந்துகொண்டிருந்தபோது அவரை வரவேற்க மதுரை ஆதீனம் நின்றுகொண்டிருந்தார். மதுரை ஆதீனத்தை பார்த்தும் பிரதமர் மோடி காரை நிறுத்தினார். அப்போது காருக்கு அருகில் சென்று பிரதமர் மோடிக்கு மதுரை ஆதீனம் பொன்னாடை அணிவித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் மதுரை ஆதீனம் கூறுகையில், பிரதமர் மோடியை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கச்சத்தீவு மீட்க வேண்டும், இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். 2024-ல் பா.ஜ.க. வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார். மோடி மீண்டும் பிரதமராக என்னுடைய ஆதரவும், ஆசீர்வாதமும் என்றென்றும் உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.