இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்: அன்பில் மகேஸ்

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனமான ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் சுமார் 20,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஊதிய முரண்பாட்டைக் களைந்து சம வேலைக்குச் சம ஊதியம் தரக் கோரி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னையில் கடந்த பிப்.19-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் தொடர்கிறது.

இந்நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:-

இடைநிலை ஆசிரியர்கள் ஒரு வாரமாக தங்கள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி தொடர் போராட்டம் மேற்கொண்டு வருகிறீர்கள். பள்ளிகளில் தற்போது தேர்வு காலமாகும். குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு போராட்டத்திலிருந்து விலகி பணிக்குத் திரும்ப வேண்டும்.

வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்காக ரூ.44,042 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட 50,000 ஆசிரியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கியுள்ளோம். ஆசிரியர்களின் கோரிக்கைகளை பல்வேறு நிலையில் தீர்த்து வைத்து உங்கள் நலனுக்காகச் செயல்படும் அரசாக திமுக ஆட்சி இருக்கிறது.

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் 3 கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தியுள்ளது. மற்ற சங்கங்களுடன் கருத்துக் கேட்பு நடத்த வேண்டியுள்ளது. அதன்பின்னர் இது சார்ந்து அறிக்கையைப் பெற்று முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்.

மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு ஆயத்தப்படுத்த வேண்டிய கடமை நமக்குள்ளது. எனவே, கற்றல், கற்பித்தல் மற்றும் தேர்வுப் பணியில் கவனம் செலுத்தி மாணவர்களின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக பணிபுரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதனால் குழந்தைகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.