தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த 9 எழுத்தாளர்களுக்கு ‘இலக்கிய மாமணி’ விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த 2021 ஜூன் 3-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் ‘இலக்கிய மாமணி’ என்ற விருது உருவாக்கப்படுகிறது. தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் 3 அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும்’’ என்று தெரிவித்தார். அதன்படி, மரபு தமிழ், ஆய்வு தமிழ், படைப்பு தமிழ் ஆகிய வகைப்பாட்டில் ஆண்டுதோறும் இலக்கிய மாமணி விருது வழங்கப்படுகிறது.
அந்த வரிசையில், 2022-ம்ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த அரங்க. ராமலிங்கம், (மரபு), விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கொ.மா.கோதண்டம் (ஆய்வு), கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சூர்யகாந்தன் (எ) மா.மருதாச்சலம் (படைப்பு) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நேர்வாக, இலக்கிய மாமணி விருதுக்கு நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மணி அர்ஜுனன் (மரபு), திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அர.திருவிடம் (ஆய்வு), சென்னை மாவட்டத்தை சேர்ந்த க.பூரணச்சந்திரன் (படைப்பு) ஆகியோர் தேர்வாகினர்.
இதேபோல, 2023-ம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுக்கு, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஞா.மாணிக்கவாசகன் (மரபு), திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சு.சண்முகசுந்தரம் (ஆய்வு), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கவிஞர் இலக்கியா நடராசன் (எ) ச.நடராசன் (படைப்பு) ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
இலக்கிய மாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட விருதாளர்களுக்கு, ரூ.5 லட்சத்துக்கான காசோலை, ஒரு பவுன் தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை வழங்கி, பொன்னாடை அணிவித்து முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில்நடந்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், தா.மோ.அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன், ஆர்.காந்தி, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, செய்தித் துறை செயலர் இல.சுப்பிரமணியன், செய்தித் துறை இயக்குநர் ஆர்.வைத்திநாதன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் ஆகி யோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.