இரட்டை இலை சின்னத்தில் தான் நிச்சயமாக போட்டியிடுவோம்: ஓ.பன்னீர்செல்வம்!

இரட்டை இலை சின்னத்தில் தான் நிச்சயமாக போட்டியிடுவோம், தேர்தல் ஆணையம் எங்களுக்குத்தான் சின்னம் ஒதுக்கும் என உறுதியாகக் கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலைச் சந்திக்க தீவிரமாக தயாராகி வருகின்றனர். வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முடிவெடுத்துள்ளார். பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் தரப்புக்கு எத்தனை சீட், எந்தெந்த தொகுதி, என்ன சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்பவை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், பாஜக கூட்டணியில் தான் போட்டியிடுவோம் என அடித்துக் கூறி வருகிறார் ஓபிஎஸ்.

லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்று தனது ஆதரவாளர்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் ஓ.பன்னீர்செல்வம். மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிகாரம் வழங்கி, இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், பாஜக உடன் தான் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளோம் என அறிவித்தார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஓபிஎஸ், “10 ஆண்டு காலம் இந்திய நாட்டின் பிரதமராக இருந்த நரேந்திர மோடி பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். மீண்டும் 3வது முறையாக மோடி தான் பிரதமராக வரவேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. பாஜக கூட்டணியில் தொடர்கிறோம். பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன” என்றார்.

தாமரை சின்னத்தில் போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அதை எல்லாம் பின்னால் பேசுவோம் என மழுப்பலாக பதில் அளித்தார். வரும் மார்ச் 4ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வரும்போது சந்தித்துப் பேசுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அதற்கும், “பின்னால் பார்ப்போம்” என பதில் அளித்தார் ஓபிஎஸ்.

தொடர்ந்து, இரட்டை இலை சின்னம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், “ஏற்கனவே வழக்கு நிலுவையில் இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தற்காலிக தீர்வாகத்தான் அந்த தேர்தலுக்கு மட்டும் இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது. நல்ல முடிவு விரைவில் வரும். உறுதியாக இரட்டை இலை சின்னத்தில் தான் நிற்போம். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுக் கிடக்கிறது, திமுகவுக்கு தோல்வியை அளிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது எங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்றோம். ஆனால், கொங்கு பெல்ட்டிலேயே தோல்வியைத் தழுவினோம். எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே முடிவு. மக்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தை நாடுவோம். உரிய நேரத்தில் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும். இரட்டை இலை சின்னத்தில் தான் வரும் தேர்தலில் போட்டியிட உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.