பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் மே மாதம் ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில்களை இயக்காமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ரயில்வே யூனியன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று இந்திய ரயில்வே. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்திய ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார்கள். தொழிலாளர்கள் நலன் கருதி, ரயில்வே தொழிலாளர் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை ரயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டுவிட்டு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் தீவிரமாக கையில் எடுக்க ரயில்வே யூனியன்கள் முடிவு செய்துள்ளன. அதாவது, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தவில்லை என்றால் வரும் மே 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில்களை இயக்க மாட்டோம் என்று ரயில்வே தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்துவதற்காக JFROPS என்ற பெயரில் ஒரே குடையின் கீழ் ரயில்வே யூனியன்கள் கூட்டமைப்பை தொடங்கியுள்ளனர். இந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா கூறியதாவது:-
புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வர வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை அரசு முற்றிலும் புறக்கணித்து வருகிறது. எனவே, ரயில்வே தொழிற்சங்கங்கள் அரசிடம் வேலை நிறுத்தத்திற்கான நோட்டீஸை வரும் மார்ச் 19 ஆம் தேதி கொடுக்க உள்ளோம். தொழிலாளர் தினத்தன்று இந்த வேலை நிறுத்தம் நடைபெறும். அரசின் பிற துறைகளில் உள்ள ஊழியர்களும் ரயில்வே ஊழியர்களுடன் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். புதிய பென்ஷன் திட்டம் தொழிலாளர் நலனுக்கானதாக இல்லை. பழைய ஓய்வூதிய திட்டம்தான் தொழிலாளர்களுக்கு சாதகமானதாக உள்ளது” என்றார்.
நாட்டில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களின் மூலம் லட்சக்கணக்கான பயணிகள் தினம் தோறும் பயணித்து வரும் நிலையில், ரயில்கள் வேலை நிறுத்தம் நடத்தினால், பயணிகளுக்கும் பெருமளவு பாதிப்பு ஏற்படும். அதேபோல் கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்பதால், ரயில்வே ஊழியர்கள் கூட்டமைப்பிடம் பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.