தகுதியை தக்க வைக்கவே பம்பரம் சின்னத்தில் போட்டி: வைகோ

பதிவு செய்யப்பட்ட கட்சி என்ற தகுதியை தக்க வைக்கவே தங்கள் சின்னத்தில் போட்டியிடுவதாக வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

திமுக கூட்டணியில் மதிமுக அங்கம் வகிக்கும் நிலையில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியாக உள்ளது. மதிமுக 2 +1 கேட்கும் நிலையில் திமுக 1+1 கொடுக்க முன்வந்துள்ளது. ஆனாலும் பேச்சுவார்த்தை இன்னும் சுமூகமாக முடிந்தபாடில்லை. இதற்கு காரணம் உதயசூரியன் சின்னத்தில் தங்களால் போட்டியிட முடியாது என மதிமுக கறார் காட்டுவது தான். வைகோவையும், துரை வைகோவையும் சமாதானம் செய்வதற்கான வேலைகளில் திமுக இறங்கியுள்ளது. சின்னம் விவகாரத்தில் திமுக இந்தளவுக்கு நெருக்கடி கொடுக்கும் என்பதை எதிர்பாராத வைகோ, இதனால் சற்று கடும் அப்செட் ஆகியிருக்கிறார். இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கருணாநிதி நினைவிடம் திறப்பு விழா, முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது என பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இதனிடையே மதிமுகவினர் சிலர் திமுக மீது விமர்சனக் கணைகளை வீசத் தொடங்கியிருப்பதால் அதனை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த முற்பட்ட வைகோ அது குறித்த ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு; ”கூட்டணி குறித்து மதிமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிடுவதும், விமர்சனங்களை முன்வைப்பதும் எனக்கு மன வேதனை அளிக்கிறது. தமிழக மக்களின் வாழ்வாதார உரிமைகளைக் காக்க தன்னலம் கருதாது பாடுபடும் கட்சி மதிமுக என்பதை உணர வேண்டும்.” என வைகோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய வைகோ செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பதிவு செய்யப்பட்ட கட்சி என்ற தகுதியை தக்க வைத்துக் கொள்வதற்காகவே, எங்கள் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கேட்கிறோம்’’ என்றார்.