அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த நடனக் கலைஞர் அமர்நாத் கோஷ், மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் படிக்கும் இந்தியர்கள் சந்தித்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்தியாவைச் சேர்ந்த அமர்நாத் கோஷ் என்ற நடனக் கலைஞர், மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் அமர்நாத் கோஷ். இவர் ஒரு சிறந்த பரதநாட்டியம் மற்றும் குச்சுப்புடி நடனக் கலைஞர் ஆவார். சென்னையில் உள்ள கலாஷேத்ரா அகாடமியின் முன்னாள் மாணவரான இவர், டெல்லியில் உள்ள சர்வதேச கலாச்சார அமைச்சகத்திடம் இருந்து குச்சிப்புடிக்கான தேசிய உதவித் தொகையையும் பெற்றுள்ளார். மேலும், புகழ்பெற்ற நடனக் கலைஞர்களான போபிதா டே சர்க்கார், ஸ்ரீ எம்.வி.நரசிம்மாச்சாரி, பத்மஸ்ரீ அடையார் கே.லக்ஷ்மண் ஆகியோரிடம் பயிற்சி பெற்றவர்.
இவருடைய பெற்றோர் இறந்துவிட்டனர். அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நகரில் MFA படித்து வந்தார். அங்கு அவர், படித்து வந்த கல்வி நிலையம் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது, மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதனை அவரது நண்பரும், தொலைக்காட்சி நடிகையுமான தேவலீனா பட்டாச்சார்ஜி, சிக்காகோவில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதனையடுத்து, இந்திய தூதரகம் வெளியிட்ட தகவலில், “அமர்நாத் கோஷ் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். போலீஸார் மற்றும் தடயவியல் நிபுணர்களின் அறிக்கையை கவனித்து வருகிறோம்” என தெரிவித்துள்ளது. மேலும், “அமர்நாத் கோஷின் உறவினர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இந்தச் சம்பவத்தை போலீஸார் மற்றும் கல்வி நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.