எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை பாஜக பயன்படுத்த வெட்கப்பட வேண்டும்: ஜெயக்குமார்!

எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை பாஜக பயன்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜெயக்குமார், இதற்கு அவர்கள் வெட்கப்பட வேண்டும் என்றும் கடுமையாகச் சாடியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பல விஷயங்களைக் குறித்து விரிவாக பேசினார். அவர் கூறியதாவது:-

பொதுவாக எந்தவொரு தலைவர் பிறந்த நாளாக இருந்தாலும் ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்படும். ஆனால், அதிமுக தலைவர்கள் பிறந்த நாள் முழுக்க கொண்டாடப்படும். அந்தளவுக்குச் செல்வாக்கு பெற்ற தலைவர்கள். திமுகவை போல இல்லாமல் அதிமுகவினர் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள். இதனால் ஆட்சியில் இல்லை என்றாலும் சொந்த செலவில் நலத்திட்டப் பணிகளைச் செய்து வருகிறார்கள். 30 ஆண்டுகள் ஆண்ட கட்சி, 2026இல் ஆளப்போகிற கட்சி நாங்கள் தான்” என்றார்.

புதுச்சேரியில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் வைக்கப்பட்டுள்ள பாஜக பேனர்கள் குறித்த கேள்விக்கு அவர், “இதற்குப் புதுச்சேரி அதிமுக பிரிவு சார்பில் அதிகாரப்பூர்வமாகக் கண்டனம் தெரிவித்துள்ளோம். எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை பாஜக பயன்படுத்த வெட்கப்பட வேண்டும். எதற்காக இப்படி எங்கள் தலைவர்கள் படங்களைப் பயன்படுத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் தலைவர்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதையே இது காட்டுகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா முகங்களைக் காட்டி மக்களை ஏமாற்ற முயன்றால் அது நடக்காது. அந்த இரண்டு முகங்களுக்கு அதிமுக மட்டுமே சொந்தமானது. இப்படியொரு கீழ்த்தரமான அரசியலை பாஜக கையில் எடுத்துள்ளது. திருச்சியில் அண்ணாமலை பேசுவதைப் பார்த்து இருப்பீர்கள். ஏதோ இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய எழுச்சி மாநாட்டை நடத்துவதாக அண்ணாமலை கூறியிருந்தார். ஆனால், நான் டிவியில் பார்த்தேன் எல்லா சேர்களும் காலியாக இருந்தது. காலி சேர்களை பார்த்து அண்ணாமலை பேசி வருகிறார். அந்தக் கூட்டத்தில் யாருமே இல்லை. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எந்தவொரு ஆதரவும் இல்லை” என்றார்.

தொடர்ந்து திமுகவைச் சாடி பேசிய அவர், “காலி மது பாட்டில்களை பெறும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது. அதில் மிகப் பெரிய மோசடி நடக்கிறது. காலி மது பாட்டில்களை பெறுவது மீண்டும் மது ஆலைகளுக்குச் செல்ல வேண்டும். இதற்காகக் கோவை டெண்டர் விட்டார்கள். அதில் மோசடி நடந்து அரசுக்கு வர வேண்டிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நேரத்தில் மற்ற மாவட்டங்களுக்கு டெண்டர் கோரி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் முழுக்க அவர்களின் கட்சிக்காரர்களுக்கே இந்த டெண்டரை கொடுக்க திட்டமிட்டுள்ளனர். இதில் மாதம் 50 கோடி ரூபாய் அடிக்கிறார்கள். ஏழை மக்கள் கிடைக்கும் பணத்தைக் கூட பிடுங்க திமுக முயல்கிறது” என்று சாடினார்.

மேலும், அவர், “திமுகவுக்கும் பாஜகவும் இடையே மறைமுக கூட்டு இருக்கிறது. நாங்கள் அடிப்பது போல அடிக்கிறோம். நீங்கள் அழுவது போல அழுங்கள் என சொல்லி வைத்துவிட்டுச் செய்கிறார்கள். மோடி தமிழகம் வருவதால் ஒன்னும் நடக்காது. அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டு சதவிகித வாக்குகள் அதிகம் கிடைக்கும். பாஜக சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களுக்குத் தாங்கலே பில்டப் தருவார்கள். ஆனால், களத்தில் எந்தவொரு பலனும் இல்லை. நாங்கள் என்ன குழந்தையா எங்களை யாராலும் மிரட்ட முடியாது. 1970களிலேயே வராதா மிரட்டல்களா. எம்ஜிஆர் கட்சியைத் தொடங்கிய போது அதிமுகவை முடக்கக் கருணாநிதி தராத மிரட்டல்களா. அதையெல்லாம் நாங்கள் பார்த்தவர்கள்.. 1000 கருணாநிதி, 1000 ஸ்டாலின் வந்தாலும் அஞ்சாதவர்கள். பாஜகவுக்கா அஞ்சப் போகிறோம். நாங்கள் யாரை நம்பியும் இல்லை. எங்களுக்கென தனித்தன்மை இருக்கிறது. மக்கள் ஆதரவு கடந்த காலங்களிலும் இருந்துள்ளது. எனவே, அவர்கள் கூட்டணியில் இருக்கும் பிரச்சினையை வைத்துக் குளிர்காய வேண்டிய அவசியம் இல்லை. அதேநேரம் அவர்கள் வந்தால் வரவேற்போம்” என்றார்.