நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்காது அநீதி: சீமான்!

நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்காது அநீதி என்றும் நாட்டின் தேசிய மலரை சின்னமாக வைத்து இருக்கும் பாஜகவின் தாமரை சின்னத்தை முதலில் ஒழிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக பேசினார்.

நாம் தமிழர் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்தில் வழக்கமாக போட்டியிடும். அதாவது கரும்பு விவசாயி சின்னம். ஆனால் இந்த சின்னம் இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்காது என கூறப்படுகிறது. ஏனென்றால் அந்த சின்னம் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஜக்யதா கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துவிட்டதாம். இதனால் சீமான் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக சீமான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், சீமானின் நாம் தமிழர் கட்சி என்பது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால், கரும்பு விவசாயி சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கி தர வேண்டும் என அக்கட்சியால் கோர முடியாது என கூறியுள்ளது. மேலும் எழுத்துப்பூர்வ உத்தரவு பிறப்பிப்பதற்காக வழக்கு விசாரணையை நீதிபதி தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான் கூறியதாவது:-

சின்னமும் ஒரு வலிமை என்று எடுத்துக்கொண்டாலும் கூட கொண்டு போய் சேர்த்தது நாங்கள்தான். நாடாளுமன்ற தேர்தலில் ஒரு விழுக்காடு வாக்கு பெற்றிருந்தால் சின்னம் ஒதுக்கும் போது அந்தக் கட்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று விதி இருக்கிறது. இப்போ அவசர அவசரமாக வட மாநிலத்தில் பெரிய கட்சிக்கோ.. அமைப்புக்கோ எடுத்து கொடுத்திருந்தால் கூட ஒரு மாதிரியாக இருந்து இருக்கும். ஆனால், பாஜகவில் இருந்து பிரிந்து சென்ற ஒரு கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டி போட்டு இருக்கிறார். 71 வாக்கு வாங்கியிருக்கிறார். எல்லோரும் போல சின்னத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று வரும் போது அந்த கால கட்டத்தில் வெள்ள பாதிப்புக்கு மக்களோடு நின்னுட்டேன்.. அதை கவனிக்கல.. 6 மாதத்திற்குள் சின்னம் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். ஒரு கால அவகாசம் உள்ளது. நான் விண்ணப்பிற்கும் முன்பாக ஒருவர் விண்ணப்பிக்கிறார். அவசர அவசரமாக அந்த நிமிடமே அந்த சின்னத்தை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன உள்ளது. தேர்தல் அறிவிக்கவில்லை. மனுக்களை வாங்கி வைத்துக்கொண்டு பரிசீலிக்கும் போது சின்னத்தை ஒதுக்கலாம்.

சின்னமே ஒதுக்காத போது படக்கென்று அவருக்கு எடுத்துக்கொடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது. விவசாயி என நான் வைத்த பெயர். இதில் இன்னும் நுட்பமாக பாருங்க.. அவர் இந்திய கட்சியாக தேசிய கட்சியாக பதிவு செய்ததாக சொல்கிறார்கள். பதிவு பண்னாலே தேசிய கட்சியாகிவிடும் என்றால் எப்படி… நாங்கள் பதிவு செய்த கட்சிதான்.. அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்கிறீர்கள். அவரும் பதிவு செய்த கட்சிதானே.. அவருக்கு எப்படி சின்னத்தை எடுத்துக் கொடுத்தீர்கள். கர்நாடகாவில் போட்டியிட இந்த தேர்தலிலும் சிலிண்டர் சின்னத்தைதான் அவர் வாங்கியிருக்கிறார். ஆந்திராவில் கேஸ் டவ் சின்னத்தை வாங்கியிருக்கிறார். ஒரு கட்சிக்கு மூன்று சின்னம் எப்படி கொடுத்தீர்கள்.. எந்த விதியில் இருக்கிறது. கேட்டால் முதலில் வந்தார் என்று சொல்கிறார்கள். முதலில் வந்தால் மனுவை வாங்கி வையுங்கள்.

நாங்கள் விண்ணப்பிக்கவில்லை.. கேட்கவில்லை.. யாருக்குமே தகுதி இல்லை என்றால் முதலில் வந்தவர்களுக்கு கொடுங்கள். அதுதானே தர்மம். நான் 6 தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறேன். 7 விழுக்காடு தொட்டு இருக்கிறேன். இந்த முறை கொடுத்தால் அங்கீகாரம் பெற்றிருப்பேன்.. ஏன் சின்னத்தை தூக்கினீர்கள். நாங்கள் போராடி மக்களிடம் சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் போது மற்றொருவரிடம் கொடுக்கிறீர்கள்.

என் வாக்கு சதவிகித்தை குறைக்கவே இப்படி செய்கிறார்கள். பாஜக தலைமைக்கு இதற்கும் தொடர்பு இல்லையா.. தேர்தல் தேதியே அறிவிக்காமல் சின்னம் ஏன் கொடுத்தீர்கள். பொதுக்குழு நடத்தி, வரி கட்டாத கட்சிக்கு எதற்காக சின்னத்தை ஒதுக்க வேண்டும். இது அநீதி. நான் முதலில் மயில் சின்னம் கேட்டபோது தேசிய பறவை என்றார்கள். நாட்டின் தேசிய மலரை சின்னமாக வைத்து இருக்கும் பாஜகவின் தாமரை சின்னத்தை முதலில் ஒழிக்க வேண்டும். தேர்தல் முடிந்ததும் வழக்கு போடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.