கூடங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அணுமின் உற்பத்தி திட்டத்தால் ஏற்படும் பேரழிவுகளை தடுக்க போராடி வரும் நிலையில், கல்பாக்கத்தில் ஈனுலை இயக்கத்தை தொடக்கி வைப்பது தமிழகத்தை அணுக்கழிவுக் குப்பைத் தொட்டியாக்கும் முயற்சியாகும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் பாவினி நிறுவனம் 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலைக்கு எரிபொருள் நிரம்பும் திட்டத்தை பிரதமர் இன்று (04.03.2024) தொடக்கி வைக்கிறார். இந்த அணு மின் உற்பத்தியால் இப்பகுதியின் சுற்றுச் சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால் ஈனுலை திட்டத்தை கைவிட வேண்டும் என பொதுமக்களும், வல்லுநர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே கூடங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் அணுமின் உற்பத்தி திட்டத்தால் ஏற்படும் பேரழிவுகளை தடுக்க போராடி வரும் நிலையில், கல்பாக்கத்தில் ஈனுலை இயக்கத்தை தொடக்கி வைப்பது தமிழகத்தை அணுக்கழிவுக் குப்பைத் தொட்டியாக்கும் முயற்சியாகும்.
அண்மையில் இயற்கை பேரிடர் பாதிப்புகளை தொடர்ந்து இருமுறை சந்தித்த தமிழகத்துக்கு பேரிடர் நிதி வழங்க முன்வராத மத்திய அரசு தமிழகத்தின் சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்தும் ஈனுலை இயக்கத்தை தொடங்குவது மக்கள் நலனுக்கு எதிரானது என்பதால் அத்திட்டத்தை கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.