தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1000: டெல்லி பட்ஜெட்டில் அறிவிப்பு!

2024 – 2025-ஆம் ஆண்டுக்கான டெல்லி பட்ஜெட்டில் அம்மாநிலத்தில் 18 வயது நிரம்பிய தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி அரசின் 2024-2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் அதிஷி இன்று (திங்கள்கிழமை) தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அதிஷி, “டெல்லி அரசு ராம ராஜ்ஜியத்தை கொண்டு வர பாடுபடுகிறது. இங்கே உள்ள ஆம் ஆத்மி உறுப்பினர்கள் அனைவருமே கடவுள் ராமரால் ஈர்க்கப்பட்டவர்கள்தான். கடந்த 9 ஆண்டுகளாக இரவு, பகலாக நாங்கள் ராமர் ஆட்சியைக் கொண்டு வர பாடுபடுகிறோம். மக்கள் அனைத்து வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ பாடுபடுகிறோம். ராம ராஜ்ஜியம் நினைவாக கடின உழைப்பை செலுத்தியுள்ளோம். இருப்பினும், இன்னும் நிறைய உழைக்க வேண்டும்” என்றார்.

பின்னர் பட்ஜெட் குறித்து டெல்லி நிதியமைச்சர் அதிஷி அளித்தப் பேட்டியில், “கெஜ்ரிவால் அரசு 18 வயது நிரம்பிய தகுதிவாய்ந்த பெண்கள் அனைவருக்கும் ரூ.1000 வழங்கப்படும். 2024 – 2025 நிதியாண்டு முதல் இது செயல்பாட்டுக்கு வரும்” என்றார்.

கெஜ்ரிவால் அரசின் இந்தத் திட்டத்துக்கு மஹிளா சம்மன் யோஜனா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற பெண்ணுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். டெல்லியில் வாக்களிக்கும் உரிமை பெற்றவராக இருக்க வேண்டும். வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது. அந்தப் பெண் அரசு ஊழியராகவோ அல்லது டெல்லி அரசின் வேறேதும் பென்ஷன் திட்டத்தின் பயனாளியாகவோ இருந்தால் அவரால் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது என்று பயனாளர்களுக்கான தகுதி வரையறுக்கப்பட்டுள்ளது.