ஒருநாள் பயணமாக இன்று தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடி, செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் விரைவு பெருக்கி உலை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மகாராஷ்டிராவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடி வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் சென்றார். அங்கு, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாவனி என்கிற 500 மெகாவாட் திறன் கொண்ட விரைவு பெருக்கி உலை திட்டத்தை தொடங்கி வைத்தார். கடந்த 2003-ம் ஆண்டு, இத்திட்டத்தை அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தொடங்கி வைத்திருந்தார்.
முதல்கட்டமாக, அதில் எரிபொருள் நிரப்பும் பணியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். முன்னதாக, கல்பாக்கம் வந்த பிரதமர் மோடி, பாவனி விரைவு பெருக்கி உலை திட்டத்தின் பயன்பாடு மற்றும் செயலாக்கத்தை அங்கிருக்கும் விஞ்ஞானிகளிடம் கேட்டறிந்தார். நாட்டிலேயே முதல்முறையாக இந்த திட்டம் கல்பாக்கத்தில் செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு முடிந்த பிறகு, சென்னை திரும்பிய பிரதமர் மோடி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
இதற்காக, கல்பாக்கத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்துக்கு காரில் வருகை தந்தார். அப்போது, பாஜக சார்பில் வழிநெடுகிலும் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. பிரதமரின் வருகையையொட்டி, சென்னையில் 15,000 போலீஸார், 5 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.