காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு வளர்ச்சித் திட்டங்களை முடிப்பதில் ஒருபோதும் ஆர்வம் காட்டியதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
ஒடிசா மாநிலம் சண்டிகோலில் ரூ.19,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் கூறியதாவது:-
பகவான் ஜகந்நாதர், மா பிர்ஜா ஆகியோரின் ஆசீர்வாதத்தால், ஜஜ்பூர் மற்றும் ஒடிசாவில் வளர்ச்சியின் புதிய நீரோட்டம் இன்று ஓடத் தொடங்கி இருக்கிறது. பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, அணுசக்தி, சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஆகிய துறைகளில் சுமார் ரூ. 20,000 கோடி மதிப்பிலான மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இது இந்தப் பிராந்தியத்தில் தொழில்துறை நடவடிக்கைகளை ஊக்குவிப்பதோடு புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.
வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தீர்மானத்துக்காகப் பணியாற்றும் அதே வேளையில், நாட்டின் தற்போதைய தேவைகளை நிறைவேற்றுவதிலும் அரசு கவனமுடன் செயல்படுகிறது. உர்ஜா கனகாத் திட்டத்தின் கீழ், உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய ஐந்து பெரிய மாநிலங்களில் இயற்கை எரிவாயு விநியோகத்துக்கான பெரிய திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒடிசாவின் பாரதீப் முதல் மேற்கு வங்கத்தின் ஹால்டியா வரை 344 கி.மீ நீளமுள்ள உற்பத்திக் குழாய் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. பாரதீப் சுத்திகரிப்பு ஆலையில் இந்தியன் ஆயில் கழக நிறுவனம் மோனோ எத்திலீன் கிளைக்கோல் திட்டமும், பாரதீப்பில் ஆண்டுக்கு 0.6 மில்லியன் மெட்ரிக் டன் சமையல் எரிவாயு இறக்குமதி வசதியும் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இது பத்ரக், பாரதீப்பில் உள்ள ஜவுளிப் பூங்காவிற்கு மூலப்பொருட்களை வழங்கும்.
இன்றைய நிகழ்ச்சி, நாட்டில் மாறிவரும் பணிக் கலாச்சாரத்தின் அடையாளமாகும். காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு, வளர்ச்சித் திட்டங்களை முடிப்பதில் ஒருபோதும் ஆர்வம் காட்டியதில்லை. ஆனால், தற்போதைய மத்திய அரசு, அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களை உரிய நேரத்தில் தொடங்கி வைக்கும் பணிகளை மேற்கொள்கிறது. ஒடிசாவின் வளர்ச்சிக்காக கிழக்கு இந்தியாவில் உள்ள ஏராளமான இயற்கை வளங்களை மத்திய அரசு பயன்படுத்துகிறது. கஞ்சம் மாவட்டத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை, நாள்தோறும் சுமார் 50 லட்சம் லிட்டர் உப்பு நீரை சுத்திகரித்து குடிப்பதற்கு ஏற்றதாக மாற்றும்.
உள்ளூர் ஆதாரங்களைக் கொண்டு மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ஒடிசாவில் நவீனப் போக்குவரத்தில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 3,000 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ரயில்வே பட்ஜெட் 12 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்-நெடுஞ்சாலை – துறைமுக இணைப்பை மேம்படுத்தும் வகையில், ஜஜ்பூர், பத்ரக், ஜகத்சிங்பூர், மயூர்பஞ்ச், கோர்தா, கஞ்சம், பூரி, கெந்துஜார் ஆகிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. புதிய அங்குல் சுகிந்தா ரயில் பாதை, கலிங்கா நகர் தொழில்துறை பகுதியின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.