ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாட்டிற்கு திருப்பி அனுப்ப ஐகோர்ட் தடை!

ஜெயலலிதா நகைகளை தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பும் சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு கர்நாடக ஐகோர்ட் தற்காலிக தடை விதித்தது.

தமிழ்நாட்டில் கடந்த 1991 முதல் 1996ஆண்டு கால கட்டத்தில் முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து, ஜெயலலிதாவின் தங்கம் மற்றும் வைர‌ நகைகள், வெள்ளிப் பொருட்கள், கைக் கடிகாரங்கள், பட்டுப்புடவைகள், விலையுயர்ந்த காலணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தங்கம், வைரம், மரகதம், முத்துக்கள், ரத்தினக் கற்கள் மற்றும் பல வண்ண கற்கள் உள்பட 468 நகைகள் பறிமுதல் பட்டியலில் இடம்பெற்றன. அத்துடன், 11 ஆயிரத்து 344 புடவைகளும், 750 காலணிகள் மற்றும் 250 சால்வைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. ஏசி இயந்திரங்கள் 44, 33 தொலைபேசிகள், 131 சூட்கேஸ்கள், 91 கைக்கடிகாரங்கள், 27 சுவர் கடிகாரங்கள், 86 மின்விசிறிகள், 146 அலங்கார நாற்காலிகள், 34 டீப்பாய்கள், 31 டேபிள்கள், 24 கட்டில்கள், 31 டிரெஸ்ஸிங் கண்ணாடி டேபிள்கள், 81 அலங்கார தொங்கும் விளக்குகள், 20 சோபா செட்டுகள், 215 அழகிய வேலைபாடுகளுடைய கண்ணாடிகள் கைப்பற்றப்பட்டன.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நடத்தியதால், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அங்குள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டன. இதனிடையே, உடல்நலக்குறைவால் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு காலமான நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில், அவரது உயிர் தோழி சசிகலா உள்ளிட்டோர் சிறை சென்றனர்.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட்டு, அந்த பணத்தை நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் எனக் கோரி சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, கர்நாடக அரசு ஜெயலலிதாவின் நகை உள்ளிட்ட சொத்துகளை ஏலம் விட வழக்கறிஞர் ஒருவரை நியமித்தது.

இந்நிலையில், நகை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுக்கு வாரிசுதாரர்கள் உரிமை கோர முடியாது என நீதிமன்றம் கூறியது. மேலும், நகைகளை ஏலம் விடுவதற்கு பதிலாக தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கலாம் என பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன் தெரிவித்தார். இதற்காக தமிழ்நாடு அரசு செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரியை நியமித்து, அவர் மூலமாக போலீசாருடன் இணைந்து நகைகளை பெற்றுக்கொள்ள உத்தரவிட்டார்.

இந்த வழக்கு கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு வசம் உள்ள ஜெயலலிதாவின் தங்க நகைகளை தமிழ்நாடு அரசிடமே ஒப்படைக்க நீதிபதி மோகன் உத்தரவிட்டு இருந்தார். மேலும், கர்நாடக அரசுக்கு வழக்கு செலவு கட்டணமாக 5 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்றும் கூறி வழக்கை, பிப்ரவரி 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்த வழக்கு நீதிபதி மோகன் முன்னிலையில் பிப்ரவரி 19ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு வசம் உள்ள ஜெயலலிதாவின் பொருட்களை மார்ச் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டார். அதன்படி பெங்களூருவில் இருந்து 28 கிலோ தங்கம், வைர நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகள் என மொத்தமாக 6 பெட்டகங்களில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்பட்டது. இதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் கொண்டு வரப்பட உள்ள ஜெயலலிதா நகைகளின் மதிப்பு பல கோடிகள் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை கோரி, தீபா, தீபக் ஆகியோர் கர்நாடகா மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், ஜெயலலிதா நகைகளை தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பும் சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு தற்காலிக தடை விதித்தது.

சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடைவிதிக்கக் கோரி ஜெ.தீபா, தீபக் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஜெ. நகைகளை உரிமை கோரியும் கர்நாடக கருவூலத்தில் உள்ள நகைகளை தமிழ்நாடுக்கு திருப்பி அனுப்ப தடை கோரியும் மனு தாக்கல் செய்துள்ளனர். மனுவை வரும் 26ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.