சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நிலையில் எம்எல்ஏ பதவி பறிபோனதால் திமுகவின் பொன்முடியின் திருக்கோவிலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக தேர்வாகி அமைச்சர் பதவியை வகித்து வந்தார். இந்நிலையில் பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து பொன்முடி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என அவர் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இத்தகைய சூலில் தான் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் அவரது எம்எல்ஏ பதவி தானாக காலியாகி விட்டது. ஆனால் அவரது தொகுதி மட்டும் காலியானதாக அறிவிக்கப்படவில்லை. தொகுதி காலியானதாக அறிவித்தால் மட்டுமே அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். இதுதொடர்பாக சட்டசபை சபாநாயகர் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட வேண்டும். இதில் காலதாமதம் செய்வதாக அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும் திருக்கோவிலூர் தொகுதியை காலியானதாக அறிவிக்க அவர்கள் மனு அளித்தனர்.
இந்நிலையில் தான் திருக்கோவிலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக சட்டசபை செயலகத்தில் இருந்து தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் விரைவில் திருக்கோவிலூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. அதாவது வரும் 15ம் தேதிக்குள் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. அப்போது இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் திருக்கோவிலூர் சட்டசபை தொகுதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. அதாவது நாடாளுமன்ற தேர்தலுடன் திருக்கோவிலூர் சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.