தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுக தலைமைக் கழக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முறைப்படி விருப்பமனு தாக்கல் செய்துள்ளார் கனிமொழி எம்.பி.
திமுக வேட்பாளர்கள் தேர்வுக்கான விருப்பமனு படிவம் விநியோகம் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்கள் படிவங்களை பூர்த்தி செய்து, ரூ.50 ஆயிரம் கட்டணத்துடன் மார்ச் 1 முதல் 7ஆம் தேதி மாலை 6 மணிக்குள் திமுக தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் இன்று வரை திமுகவின் முக்கிய பிரமுகர்கள் பலரும் சீட்டுக்கு பணம் கட்டியுள்ளனர். அந்த வகையில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு கேட்டு கனிமொழி எம்.பி. விருப்பமனு தாக்கல் செய்தார். ஏற்கனவே கனிமொழி பெயரில் தூத்துக்குடியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 50க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்களை அவரது ஆதரவாளர்கள் அளித்திருந்தனர். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரும் கனிமொழி பெயரில் தங்கள் ஆதரவாளர்கள் மூலம் ஏற்கனவே விருப்ப மனு கொடுத்திருந்தனர்.
நேற்று நவமி, இன்று செவ்வாய்கிழமை என்பதால் பலரும் விருப்பமனு கொடுக்க முன்வரவில்லை. நாளையும், நாளை மறுநாளும் இன்னும் நூற்றக்கணக்கானோர் எம்.பி.சீட் கேட்டு விருப்பமனு அளிக்க முன் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை அமைச்சர் நேரு மகன் பெரம்பலூர், திருச்சி தொகுதிக்கும், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மீண்டும் கள்ளக்குறிச்சி தொகுதிக்கும், தருமபுரி தொகுதியில் போட்டியிட பழனியப்பனும் விருப்பம் தெரிவித்து விருப்ப மனு கொடுத்துள்ளனர். நாளை மறுநாளுடன் விருப்பமனு கொடுக்கும் தேதி முடிவடைவதால் நாளையும், நாளை மறுநாளும் அதிக எண்ணிக்கையில் விருப்பமனுக்கள் குவியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 10ஆம் தேதி முதல் வேட்பாளர் நேர்காணல் தொடங்கிவிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.