திமுக அரசை கண்டித்து மார்ச் 11-ல் அமமுக ஆர்ப்பாட்டம்: டிடிவி தினகரன்

போதை பொருள் விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து மார்ச் 11-ல் அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அமமுக தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இளைஞர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களும் வயது வித்தியாசமின்றி போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். இவ்வாறு அனைத்து வகையான நிர்வாகச் சீர்கேடுகளின் மொத்த உருவமாக திமுக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனை கண்டித்து வரும் 11-ம் தேதி மாலை 4 மணிக்கு திமுக அரசுக்கு எதிராக அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களிலும் அமமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். திருச்சியில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொள்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிடிவி தினகரன்வெளியிட்ட பதிவில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ரூ.108 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது – இளைஞர்களின் எதிர்காலத்துக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கும் போதைப்பொருட்களின் தாராள நடமாட்டத்தை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும். போதைப் பொருட்களின் நடமாட்டத்தை வேரறுக்க முடியாத அளவுக்கு கொண்டு சென்ற தமிழக அரசின் அலட்சியப்போக்குகடும் கண்டனத்துக்குரியது. சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருப்பினும் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.