“கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் இன்று டெல்லி செல்கிறோம். பாஜக தேசிய தலைவர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து தமிழகத்தின் 39 தொகுதிகளில் யார் போட்டியிடுவது என்ற பட்டியலை வழங்கி அது குறித்து ஆலோசிக்க உள்ளோம்.” பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் வரவுள்ளதை அடுத்து வேட்பாளர்கள் தேர்வு செய்வது குறித்து நேற்று தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக நிர்வாகிகளிடம் பாஜக ஆலோசித்தது. இந்த நிலையில் இன்று பாஜக மூத்த தலைவர்கள் சென்னையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-
கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் இன்று டெல்லி செல்கிறோம். பாஜக தேசிய தலைவர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து தமிழகத்தின் அரசியல் சூழல் மற்றும் தமிழகத்தின் 39 தொகுதிகளில் யார் போட்டியிடுவது என்ற பட்டியலை வழங்கி அது குறித்து ஆலோசிக்க உள்ளோம். தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும் பாஜக தலைவர்கள் சென்று தொண்டர்களின் ஆலோசனைகளைப் பெற்றுள்ளனர். பாஜக தொண்டர்கள் எழுச்சியோடு யார் போட்டியிட வேண்டும் என்று கூறியுள்ளனர். அதனை பாஜக தேசிய தலைவர்கள் மத்தியில் எடுத்துக் கூறுவோம். எங்கள் பட்டியலில் பெண் வேட்பாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் டெல்லியில் இருந்து திரும்பும்போது தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகலாம். இவ்வாறு அவர் கூறினார்.