காசாவில் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு தாக்குலை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இரண்டாவது முறையாக இன்றும் துப்பாக்கிச்சூட்டை இஸ்ரேல் ராணுவம் தொடுத்திருக்கிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதியன்று தொடங்கிய இஸ்ரேல்-காசா போர் தற்போது வரை சுமார், 30,000க்கும் அதிகமான மக்களின் உயிரை எடுத்திருக்கிறது. போரை தடுக்க ஐநா பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதும், இஸ்ரேல் அதை மதிக்கவில்லை. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்த தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதெல்லாம், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை ரத்து செய்ய வைத்திருந்தது.
இந்நிலையில், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், சுதந்திரமான பாலஸ்தீனத்தை வலியுறுத்தியும் இஸ்லாமிய நாடுகளில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. சமீபத்தில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, இஸ்ரேலுக்கு ஆயுத உதவி செய்த அமெரிக்காவின் விமானப்படையை சேர்ந்த வீரர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டார். இச்சம்பவம் உலகம் முழுவதும் பாலஸ்தீன விடுதலை முழக்கங்களை அதிகரிக்க செய்தது. ஆனால், காசாவில் போர் நிறுத்தத்திற்கான அறிகுறிகள் கொஞ்சம் கூட தெரியவில்லை. கடந்த 4 நாட்களுக்கு முன்னர் காசாவில், இஸ்ரேலிய ராணுவம் திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டிருந்தது. இதில் அப்பாவி மக்கள் 117 பேர் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் உதவி தேடி வந்தவர்கள். ஆனால், கூட்டம் அதிகமாக இருக்கிறது என்று சொல்லி, இஸ்ரேலிய ராணுவம் இந்த கொடூரத்தை அரங்கேற்றியிருந்தது.
இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக நேற்றும் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டை இஸ்ரேலிய ராணுவம் நடத்தியுள்ளது. காசாவின் தெற்கு பகுதி முழுவதும் போரால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், வடக்கு பகுதிகளுக்கு மக்கள் இடம் பெயர்ந்திருக்கின்றனர். ஆனால் இவர்களுக்கான உணவு, உடை, குடிநீர் போன்றவை முறையாக கிடைக்கவில்லை. ஐநா அனுப்பிய உதவிகளும், நட்பு நாடுகள் அனுப்பிய உதவிகளும் ராஃபா எல்லையில் இருக்கின்றது. எல்லையை தாண்டி குறைவான அளவேதான் உணவு உள்ளே வடக்கு பகுதிக்கு வருகிறது. இது போதுமான அளவு இல்லாததால் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் 8-10 பேர் வரை பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இச்சூழலில் இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.