வெள்ள பாதிப்பை பார்க்காதவர்களுக்கு பேச உரிமை இல்லை: அமைச்சர் துரைமுருகன்!

“வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியவர்களுக்கு தான் அதை பற்றி பேச உரிமை இருக்கிறது. வானத்தில் பறந்துவந்து கூட பார்க்காதவர்களுக்கு அதைப் பற்றி பேச உரிமை இல்லை” என்று பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் கொடுத்தார்.

வேலூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட திமுக சார்பில் விருப்பமனு அளித்தார் அமைச்சர் துரைமுருகனின் மகனும் எம்பியுமான கதிர் ஆனந்த். அவருடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார் அமைச்சர் துரைமுருகன். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், வெள்ளப் பாதிப்பு தொடர்பான பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு குறித்து பேசிய அவர், “வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியவர்களுக்கு தான் அதை பற்றி பேச உரிமை இருக்கிறது. வானத்தில் பறந்து வந்து கூட பார்க்காதவர்களுக்கு அதைப் பற்றி பேச உரிமை இல்லை. மற்றவர்கள் எல்லாம் குடும்ப அரசியல் என்று சொல்லிவிட்டு, தேசமே என் குடும்பம் என்று கூறி தேச அரசியல் செய்கிறார் மோடி. வெளிநாட்டில் இருக்கிற பணத்தை மீட்டுக்கொண்டு வந்து கொடுப்பதாக சொன்ன பணத்தை முதலில் கொடுக்கட்டும். அதன்பின் குடும்ப ஆட்சி செய்பவர்களின் சொத்தை எடுக்கட்டும். திமுக கூட்டணிக்கு எந்த பாதகமும் இருக்காது. விரைவில் கூட்டணியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடியும்.” என்றார்.

அப்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அதிமுகவின் ஜெயக்குமார் கூட்டணி அழைப்பு விடுத்ததை, “கையை பிடித்து இழுத்தாலே வராதவர்கள், கண் அடித்தால் வந்துவிடுவார்களா? என்கிற திரைப்பட வசனம் தான் இதை பார்க்கும் போது தோன்றுகிறது. ஜெயக்குமார் எதையாவது தமாஷாக பேசுவார்” என்று கூறினார் அமைச்சர் துரைமுருகன்.