காஷ்மீர் மக்களின் இதயத்தை வெல்ல வந்து இருக்கிறேன்: பிரதமர் மோடி!

பிரதமர் மோடி இன்று காஷ்மீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த ஜம்மு காஷ்மீர் என்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரூ.6,400 கோடி மதிப்பிலான திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து பேசிய மோடி, நாட்டின் கிரீரமாக ஜம்மு காஷ்மீர் உள்ளது என்று பேசினார்.

லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். தேர்தல் அறிவிப்புக்கு பிறகு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு விடும் என்பதால், அதற்கு முன்பாக வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். அந்த வகையில் இன்று பிரதமர் மோடி காஷ்மீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி, காஷ்மீர் சென்றார். ஸ்ரீநகரில் உள்ள பக்‌ஷி மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். பாஜகவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த ஜம்மு காஷ்மீர் என்ற இந்த பொதுக்கூட்டத்தில் சுமார் 2 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு காஷ்மீரின் ஸ்ரீநகரில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் பத்திரிகையாளர்களும் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். மோடி வருகையை முன்னிட்டு ஸ்ரீநகரில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. காஷ்மீர் பல்கலைக்கழகம் தேர்வுகளை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. ஜம்மு பிராந்தியத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்களும் ஏற்கனவே பாஜக கூட்டத்தில் பங்கேற்க ஸ்ரீநகருக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு தங்கும் இடம் உணவு வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக ரத்து செய்யப்பட்டது. சிறப்பு அந்தஸ்து ரத்தினால் காஷ்மீர் முன்னேற்றம் பெற்றுள்ளதாக பாஜக கூறி வருவதால் தங்களுக்கு அங்கு ஆதரவு பெருகியுள்ளதை காட்டும் விதமாக இந்த பொதுக்கூட்டம் அமைந்து இருக்க வேண்டும் என்று பாஜக விரும்பி இதற்கான ஏற்பாடுகளை செய்தது. பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருபவர்களுக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த ஜம்மு காஷ்மீர் என்று இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் ரூ6,400 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். ஸ்ரீநாகரின் ஹஸ்ரத்பால் ஆலயத்தின் ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதேபோல் அங்கிருந்தபடியே நாடு முழுவதும் யாத்திரை மற்றும் சுற்றுலா திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவக்கிரக ஆலய திட்டம், சுற்றுலா மேம்பாடு திட்டங்களையும் பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ” மக்களின் இதயத்தை வெல்ல இங்கு வந்திருக்கிறேன். நாட்டின் கிரீடம் ஜம்மு காஷ்மீர்” என்று பேசினார்.