காஷ்மீர் மக்கள் இப்போது சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றனர்: பிரதமர் மோடி!

சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் புதிய உயரங்களை தொட்டுக் கொண்டிருக்கிறது. காஷ்மீர் மக்கள் இப்போது சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த சட்டப் பிரிவு 370 கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக ஜம்மு காஷ்மீருக்கு இன்று வருகை தந்தார். தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள பக்‌ஷி மைதானத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், ரூ.5,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்தார். ஜம்மு காஷ்மீரின் விவசாயம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக்காக இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திட்டங்களைத் தொடங்கிவைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீர் புதிய உயரங்களை தொட்டுக் கொண்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மக்கள் இப்போது சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றனர். அதன் காரணமாகவே, வளர்ச்சிக்கான புதிய உச்சங்களை இந்த மாநிலம் தொடுகிறது. சட்டப்பிரிவு 370 விஷயத்தில் காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக ஜம்மு காஷ்மீர் மக்களையும் நாட்டையும் தவறாக வழிநடத்தியது.

இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டங்களால் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் கிடைக்கும். வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க வளர்ச்சி அடைந்த ஜம்மு காஷ்மீர் மிகவும் முக்கியம். ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி அடைந்தால்தான் இந்தியா வளர்ச்சி அடையும். ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் மகுடம் போன்றது. சுற்றுலாவுக்கான வாய்ப்புகளை பெருக்குவதன் மூலமும், விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதிலும்தான் ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி காண்பதற்கான வழி இருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு ஸ்ரீநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. நிகழ்ச்சி நடைபெற்ற பக்‌ஷி மைதானத்தில் தீவிர சோதனைக்குப் பிறகே மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் மூவர்ண தலைப்பாகைகளை அணிந்தவாறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள போதிலும், நகரில் மக்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்றும், கடைகள் வர்த்தக நிறுவனங்கள் வழங்கம்போல் செயல்பட்டன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.