ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மகாசிவராத்திரி கொண்டாட்டத்தின் போது மின்சாரம் தாக்கியதில் 14 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். குறிப்பாக அதில் இரு குழந்தைகளின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுக்க இன்று மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவனை வழிபடுவார் இரவு முழுக்க தூங்காமல் இருந்து சிவனைப் பிராத்திப்பதே இந்த மகாசிவராத்திரி ஆகும், இந்த மகாசிவராத்திரிக்காக நாடு முழுக்க பல்வேறு இடங்களிலும் பூஜை செய்யப்படும். அப்படி ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மகாசிவராத்திரி நடந்த ஊர்வலத்தில் எதிர்பாராத விதமாக மிக மோசமான விபத்து நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மகாசிவராத்திரி ஊர்வலத்தின் போது திடீரென மின்சாரம் தாக்கியதில் 14 குழந்தைகள் படுகாயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் ஹீரலால் நகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் மேலும் கூறுகையில், “இது மிகவும் சோகமான சம்பவம்.. இரண்டு குழந்தைகள் மிக மோசமான நிலையில் இருக்கிறது. அதில் ஒரு குழந்தைக்கு 100 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு குழந்தை பலத்த காயம் அடைந்துள்ளது. குழந்தைகளைக் காப்பாற்றத் தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதில் தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.
இது குறித்து போலீசார் கூறுகையில், “இன்று காலை 11.30-12 மணிக்குள் காளிபஸ்தி வழியாக ஊர்வலம் சென்று கொண்டு இருந்துள்ளது. அப்போது 22 அடி உயரத்தில் நின்ற சிறுவன் கொடியைப் பிடித்தபடி சென்றுள்ளார். அந்த கொடி மின்சாரக் கம்பியைத் தொட்டத்தில் இந்த விபத்து நடந்துள்ளது” என்றனர். இதில் கொடியைப் பிடித்திருந்த அந்த சிறுவனுக்கு 100% தீக்காயம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவரை மீட்க முயன்ற மற்ற சிறுவர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டது, அவர்களில் ஒருவருக்கு 50% தீக்காயம் ஏற்பட்டது, மற்ற 12 பேருக்கு 50% க்கும் குறைவாகவே காயம் ஏற்பட்டது ஏற்பட்டுள்ளதாக போலீசார் கூறுகிறார்கள்.
இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, குழந்தைகளுக்கு உடனடி உதவி மற்றும் சிறந்த சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். விபத்து தொடர்பான அனைத்து அம்சங்களையும் மனதில் வைத்து விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் கூறினார். இதனிடையே, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்த குழந்தைகளைச் சந்தித்தார். அனைத்து குழந்தைகளுக்கும் முறையான சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.