ரஷ்யாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு உறுதி!

உக்ரைனுக்கு எதிரான போரில் இந்தியர்களை வலுக்கட்டாயமாக ரஷ்ய ராணுவம் பயன்படுத்துவதாக புகார் எழுந்து இருக்கும் நிலையில், இது தொடர்பாக இந்தியா தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் இந்தியர்களை மீட்கவும் உறுதி அளித்துள்ளது.

இந்தியாவிலிருந்து சுற்றுலா சென்றவர்களும், வேலைக்காக சென்றவர்களும் ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு உக்ரைனுக்கு எதிராக போரில் பயன்படுத்தப்பட்டு வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. குஜராத்தைச் சேர்ந்த ஹமில் மங்கூக்யா என்ற வாலிபர் ட்ரோன் தாக்குதலின் போது உயிரிழந்தார். இதையடுத்தே இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. இதன் தொடர்ச்சியாக முகமது ஹப்சன் என்ற ஐதராபாத்தை சேர்ந்த வாலிபரும் போரில் உயிரிழந்தர். அதுபோக, இந்தியர்கள் ஏழு பேர் ரஷ்ய ராணுவ உடையில் தாங்கள் வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறி சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவும் பரபரப்பை கிளப்பியது.

ரஷ்யாவில் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்ததை அடுத்து சிபிஐ இது தொடர்பாக விசாரணையை தொடங்கியது. இதில், நாடு முழுவதும் ஏழு நகரங்களில் நேற்று சோதனை நடத்தியது. இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தி தொடர்பாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

போலி வாக்குறுதிகள் அளித்து வேலைக்கு ஆள் எடுத்து ரஷ்யாவுக்கு அனுப்பிய ஏஜெண்ட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. ஆள் கடத்தல் வழக்கு அவர்களுக்கு எதிராக பதியப்பட்டுள்ளது. இந்தியர்களை உக்ரைனுக்கு எதிரான போரில் வலுக்கட்டாயமாக பயன்படுத்தும் விவகாரத்தில் ரஷ்யாவிடம், இந்திய அரசு தனது கவலையை தெரிவித்துள்ளது. ரஷ்ய ராணுவத்திற்கு உதவி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியர்களை விரைவாக விடுவிக்கப்படுவதை உறுதி செய்வதில் இந்திய அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது” என்றார்.