மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் திமுகவிடம் விலை போயுள்ளார்: கஸ்தூரி

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் மோசமான நிலையில் திமுகவிடம் விலை போயுள்ளார் என நடிகை கஸ்தூரி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்தப்படும். இதற்கான அறிவிப்புகள் இந்த மாதம் வெளியாகும் என தெரிகிறது. இந்த நிலையில் திமுக, அதிமுக, பாஜக என கட்சிகள் கூட்டணி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் பிஸியாக இருந்து வருகின்றன. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, ஐயூஎம்எல், தமிழக வாழ்வுரிமை கட்சி, மதிமுக உள்ளிட்டவை கூட்டணி அமைத்துள்ளது. இவற்றில் காங்கிரஸ், விசிக, மதிமுக, தவாக தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து தொகுதிகளின் எண்ணிக்கை மட்டும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்த்தது. அதில் திமுகவுடன் நேரடியாக கூட்டணி வைக்காமல் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து அக்கட்சிக்கு காங்கிரஸ் தரும் சீட்டுகளில் ஓரிரு சீட்டுகள் கமல்ஹாசனுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போக போக அவர் திமுகவுடன் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் ஈடுபட்டு ஒரு மக்களவை தொகுதியை பெறும் என சொல்லப்பட்டது. இதற்காக கமல்ஹாசன் வெளிநாட்டு படப்பிடிப்பை கூட ரத்து செய்துவிட்டார். தேர்தல் நாள் வரை எந்த வெளிநாட்டுக்கும் செல்வதில்லை என கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்திற்கு கமல்ஹாசன் சென்றார். அங்கு அவரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்று அழைத்துச் சென்றார். பேச்சுவார்த்தைகளை முடித்துக் கொண்டு வெளியே வந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. வரும் 2025 ஆம் ஆண்டு நடக்கும் மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். இது தற்போது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. அதாவது திமுக, அதிமுகவுக்கு மாற்று என கூறி கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் தற்போது ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளாரே என கேலிக்குள்ளாகியுள்ளார்.

இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

திமுகவிடம் கமல்ஹாசன் விலை போய்விட்டார் என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. ஆனால் இத்தனை மோசமாக விலை போய்விட்டாரே. வெறும் ஒரே ஒரு ராஜ்யசபா உறுப்பினர் சீட்டுக்காக இப்படி கேவலமான முறையில் விலை போய்விட்டார். மாற்றத்தை தேடி நம்பிக்கையுடன் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வந்தவர்களுக்கு ஒரு பேரிடியாகவே கமல்ஹாசனின் இந்த முடிவு இருக்கும்.

இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் கமல்ஹாசன், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் நியமன எம்பியாக எளிதாக ஆக முடியும். அதற்கு அவர் தகுதியானவர். அவருடைய கலைப்பயணத்தை கருத்தில் கொண்டு இந்த நியமன எம்பி பதவியை குடியரசுத் தலைவர் கொடுத்திருப்பார். ஆனால் இப்படி செய்யாமல் வெறும் ஒரு சீட்டுக்காக திமுகவிடம் விலை போயுள்ளாரே என கஸ்தூரி ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் கோபத்தில் டிவியை உடைக்கும் காட்சிகளை போட்டுள்ள கஸ்தூரி, அவரது திரைப்படத்தில் வரும் என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு என்ற பாடல் வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், பாஜக நிர்வாகி எச் ராஜா உள்ளிட்டோர் பேசுவதை டிவியில் கமல்ஹாசன் பார்ப்பதை போல் இருக்கிறது. தர்மம் தன் வாழ்வதனை சூது கவ்வும் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசும் போது கமல் கோபமடைந்து டார்ச் லைட்டால் டிவியை உடைப்பது போன்ற விளம்பரம் மக்கள் நீதி மய்யத்தால் கடந்த 2019 இல் வெளியானது. அப்போது கமல் என்ன முடிவு செய்துட்டீங்களா, யாருக்கு ஓட்டு போட போறீங்க, குடும்ப அரசியல் என்ற பெயரில் நாட்டையே குழித் தோண்டி புதைத்தார்களே அவர்களுக்காக! இல்லை நம் உரிமைக்காக போராடிய போது நம்மை அடித்து துரத்தினார்களே அவங்களுக்காக? என கமல் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த வீடியோ அப்போதைய தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பெரும் ஆதரவு அலைகளை ஏற்படுத்தியது. வாக்கு சதவீதமும் அதிகரித்திருந்தது.