விஜய் சிம் ஆகும் போது, இந்த வில்லன் ஏன் மந்திரியாகக்கூடாதா?: மன்சூர் அலிகான்!

வேலூரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சித் தலைவர் மன்சூர் அலிகான், சீமான் மேஜர் ஜெனரல் ஆவேன் என்று சொல்கிறார், விஜய் சிம் ஆகும் போது, இந்த வில்லன் ஏன் மந்திரியாகக்கூடாதா? இதில் உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா என்று செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார் மன்சூர் அலிகான்.

மக்களவைத் தேர்தலையொட்டி இந்திய ஜனநாயகப் புலிகள்’ கட்சியின் தலைவரும், திரைப்பட நடிகருமான மன்சூர் அலிகான் நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். அவர் வேலூரில் உள்ள கோட்டையிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகானிடம், புதியதாக கட்சித் தொடங்க என்ன அவசியம் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மன்சூர் அலிகான், அவசியம் இருப்பதால், கட்சி தொடங்குகிறேன் என்றார். திமுகவில் ஸ்டாலின் உதயநிதி இருக்கிறார்கள் என்றால், அவர்கள் கஷ்டப்பட்டு உண்டாக்கிய கட்சி இல்லை. தந்தை பெரியார் ரோடு போட்டு பாலம் போட்டு, செய்துவைத்ததில், கரையான் புற்றுக்குள் இருப்பது போல இவர்கள் ஆண்டு அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள். அதே போலத்தான் காங்கிரஸ் கட்சியும்.

வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்குக் காரணம் ஒன்றும் இல்லை. ஏற்கனவே ஆரணி தொகுதியில் தான் போட்டியிடுவதாக அறிவித்திருந்தேன். தற்போது அங்கு பொதுச் சேவையில் ஈடுபடும் பிரபலமான நபர் ஒருவர் போட்டியிட உள்ளதால், தற்போது வேலூரில் போட்டியிடுகிறேன். ஆரணி, வேலூர், திருவண்ணாமலை, ஸ்ரீபெரும்புதூர், திண்டுக்கல் ஆகிய ஐந்து தொகுதிகளில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி போட்டியிடுவார்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய மன்சூர் அலிகான் சீமான், அண்ணாமலை, விஜய் தான் இளைஞர்களாக இருக்கிறார்களா நானும் இளைஞன் போலத்தான் இருக்கிறேன், ஏதோ ஒன்று இரண்டு முடி நரைத்துவிட்டது. சீமான் மேஜர் ஜெனரல் ஆவேன் என்று சொல்கிறார், விஜய் சிம் ஆகும் போது, இந்த வில்லன் ஏன் மந்திரியாகக்கூடாதா? இதில் உங்களுக்கு ஏதாவது மாற்றுக்கருத்து இருக்கா என்று பத்திரிக்கையாளரையே கேள்வி கேட்டு திக்குமுக்காட வைத்தார்.