கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 2.5 கோடி சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது: கார்கே!

பாஜக ஆட்சியிலிருந்த கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 2.5 கோடி சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) இழுத்து மூடப்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய அரசு மீதான தனது விமர்சனத்தை காங்கிரஸ் தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் சந்தித்த நெருக்கடிகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாஜக மீது கடும் விமர்சனத்தை வைத்திருக்கிறார். அவர் கூறியுள்ளதாவது:-

இந்தியாவில் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு என சில வரையறைகள் இருக்கின்றன. அதன்படி ரூ.1 கோடி முதலீடு செய்து, ரூ.5 கோடிக்கு குறைவாக விற்றுமுதல் கொண்டிருந்தால் அது குறு நிறுவனங்கள் எனவும், இதே ரூ.10 கோடி முதலீட்டில் ரூ.50 கோடிக்குள் பணப்பரிமாற்றத்தை கொண்டிருக்கும் நிறுவனங்கள் சிறிய நிறுவனங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இதே நடுத்தர நிறுவனங்களை பொறுத்த அளவில், அவை ரூ.50 கோடி முதலீட்டில் ரூ.200க்குள் விற்று முதல் கொண்டிருக்கும். இப்படியான சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் காங்கிரஸ் ஆட்சியில் எண்ணிக்கையில் 1.5 கோடி என வளர்ந்திருந்தது.

பாஜக ஆட்சியில் 2.5 கோடி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இதற்கான காரணமாக பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டியின் குறைபாடுகள், கோவிட் கால லாக்டவுன்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2013-2014 காலத்தில் எம்எஸ்எம்இ நிறுவனங்களில் நாடு முழுவதும் 11.14 கோடி பேர் வேலை செய்துக்கொண்டிருந்ததாகவும், ஆனால் 2022-2023ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 11.1 கோடியாக ஏன் குறைந்தது என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், “கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி, மத்திய அரசு எம்எஸ்எம்இ துறைகளுக்கு ரூ.20 லட்சம் கோடியை சிறப்பு நிதியாக அறிவித்தது. அதேபோல கடன் உத்தரவாத திட்டத்திற்காக 2020ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பாஜக அரசு ரூ.20,000 கோடியை ஒதுக்கியிருந்தது. ஆனால் இதில் வெறும் 239.19 கோடியை மட்டுமே அரசு இதுவரை விடுவித்திருக்கிறது. இது ஒதுக்கப்பட்ட தொகையில் 1.2% கூட கிடையாது. இதைவிட ஹைலைட் என்னவெனில், பிரதமரும் பாஜகவினரும் தொடர்ந்து முத்ரா கடன் திட்டத்தை பற்றி பேசி வருவதுதான். இதன் மூலம் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், யதார்த்தத்தில் ரூ.52,000 மட்டுமே கிடைக்கிறது. இப்படியாக எம்எஸ்எம்இ நிறுவனங்களின் கனவுகளை அழித்ததற்கு பாஜக பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் பாஜக பெரும் நிறுவனங்களுக்கு மட்டுமே உதவுகிறது” என்று கூறியுள்ளார்.