உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெறும் தேடுதல் குழுவை உருவாக்கி தேர்தல் ஆணையர்களை நியமிக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.
விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கடந்த 2022-ம் ஆண்டு விருப்ப ஓய்வுபெற்ற அருண் கோயல், அடுத்த 24 மணி நேரத்தில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். எனவே அவர் பாஜக அரசுக்கு சாதகமானவர்தான். இருப்பினும் அவர் என்ன நெருக்கடியில் பதவி விலகியிருக்கிறார், அவரை அச்சுறுத்தினார்களா, மத்திய பாஜக அரசின் சதி திட்டத்துக்கு ஒத்துழைக்காதது தான் காரணமா என்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற அவசியமில்லை என்னும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கை விரைந்து விசாரித்து, ஓரிரு நாட்களில் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெறும் தேடுதல் குழுவை உருவாக்கி தேர்தல் ஆணையர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.