குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் பாதுகாப்புக்காகத்தான். மதத்துக்கு எதிரானதல்ல என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரிக்கான ரயில்வே திட்டங்களை காணொலியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்ததார். அதன் பின்னர் செய்தியாளார்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய தமிழிசை, “குடியுரிமை சட்டம் நாட்டுக்குத் தேவையான சட்டம். யாருடைய குடியுரிமையும் நீக்கப்படவில்லை. குடியுரிமை சேர்க்கப்படவுள்ளது. மதத்துக்கும், இதற்கும் சம்பந்தமில்லை. நாட்டின் பாதுகாப்புக்குதான் அமல்படுத்தப்படுகிறது. ஆனால், சிலரால் இச்சட்டம் தவறாக முன் நிறுத்தப்படுகிறது. இதை பின்பற்றவே மாட்டோம் என்று சில மாநிலத்தில் கூறுகின்றனர். இதில் மாநில அரசுக்கு பங்கு இல்லை. இது மத்திய அரசின் திட்டம். இது நாட்டின் திட்டம். இதற்கு மாநில அரசுகள் ஆதரவு தரவேண்டும். இது மதத்துக்கு எதிரானதல்ல. மதத்துக்கு எதிராக இருந்தால் பிரதமர், உள்துறை அமைச்சர் முயற்சி செய்வார்களா? இது நாட்டுக்காகதான். அனைவரையும் இணைத்துதான் பிரதமர் மோடி செல்கிறார். இவர்கள்தான் பிரிவினை பேசுகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “புதுச்சேரிக்கு என்னென்ன திட்டங்கள் தேவை என காணொலியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர், அதிகாரிகள் கேட்டனர். ஒரு மாவட்டம் ஒருதிட்டத்தில் ’சுடுமண் சிற்பம்’ என்று தெரிவித்தேன். காக்கிநாடா எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டு வரை வந்தது. அதை புதுச்சேரி வரை நீட்டிக்க கோரினேன். தற்போது இரண்டும் நடந்துள்ளது.
ரயில்வே திட்டங்கள் மேம்பட்டால் இணைப்பு மேம்படும், கல்வி கற்க, தொழில், வர்த்தகம் மேம்பட உதவும், அதனால் பொருளாதாரம், சுற்றுலா வளர்ச்சி ஏற்படும். இணைப்பு ஏற்பட வளர்ச்சி உருவாகும் என்பதற்கு இது உதாரணம். காக்கிநாடா எக்ஸ்பிரஸ் புதுச்சேரி வருவதால் இனி ஆந்திரம் அருகேயுள்ள புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் போகலாம். இதுவரை ரயிலில் செல்ல வசதி இல்லை. தற்போது ஒரு நாள் நாங்கள் செல்ல உள்ளோம்” என்றார்.