முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீதான அவதூறு வழக்கிற்கு இடைக்கால தடை!

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் பற்றி பேசிய விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் செல்லூர் ராஜு. முன்னாள் அமைச்சரான இவர் தற்போது மதுரை மேற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு மே மாதம் மதுரையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை முனிச்சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் செல்லூர் ராஜூ பங்கேற்று பேசினார். அப்போது அவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். இது பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது அவதூறு சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி குற்றவியல் அரசு வழக்கறிஞர் பழனிசாமி மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த வழக்கில் செல்லூர் ராஜூவுக்கு நோட்டீஸ் எல்லாம் அனுப்பி வைக்கப்பட்டது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் தான் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடைவிதிக்கக் கோரியும் செல்லூர் ராஜூ தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

செல்லூர் ராஜூ தரப்பில் வழக்கறிஞர் முகமது ரியாஸ் ஆஜராகி, ஆளுங்கட்சிக்கு எதிராக பேசியதற்காக அரசியல் உள் நோக்கத்துடன் வழக்கு பதியபட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். மேலும் இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.