அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார் சரத்குமார்!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை அதன் நிறுவனர் சரத்குமார் இன்று பாஜகவில் இணைத்தார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சரத்குமார் தனது கட்சியினை பாஜகவுடன் இணைத்தார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் சரத்குமார் பாஜகவுடன் தனது கட்சியை இணைத்துள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகி உள்ளது.

இணைப்புக்குப் பின்னர் பேசிய சரத்குமார், “பாஜகவில் இணைந்தது சமத்துவ மக்கள் கட்சியின் முடிவு அல்ல. மாறாக மக்கள் பணிக்கான தொடக்கம். நாங்கள் மக்கள் பணியில் தொடர்கிறோம். இது நாளைய எழுச்சிக்காக எடுக்கப்பட்ட முடிவு, நாட்டின் வளர்ச்சிக்காகவும், வருங்கால இளைஞர்களின் நலனுக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தே முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார். மேலும் பிரதமர் மோடி காமராஜரைப் போல ஆட்சி செலுத்துவதாக புகழாரம் சூட்டினார்.

முன்னதாகப் பேசிய அண்ணாமலை, “சரத்குமார் தேசியத்துக்கு தேவைப்படுகிறார். அவரை சிறிய வட்டத்துக்குள் அடைத்து வைக்கக் கூடாது” என்று கூறி இணைப்பை வரவேற்றார்.