நிர்மலா சீதாராமன், பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை

தேர்தல் பத்திர விவரங்களை பொதுவெளியில் விட்டால் யார் குற்றவாளி என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ஆகியோர் முழு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கொந்தளித்துள்ளது.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை மார்ச் 6-ம் தேதிக்குள் வெளியிடுமாறு சுப்ரீம் கோர்ட், பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் கேட்டு பாரத ஸ்டேட் வங்கி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இதை விசாரித்த சுப்ரீம்கோர்ட் இன்று மாலைக்குள் வெளியிட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மறுபடியும் ஒருமுறை நீதி இன்னும் இறக்கவில்லை, உயிரோடு இருக்கிறது என்பதை இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வாயிலாக உணர்த்தி இருக்கிறது. இது இந்திய மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்திருக்கிறது. எந்த நிறுவனங்களில் தேர்தல் நிதி நன்கொடையாக பெற்று இருக்கிறார்கள். அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்ற மத்திய முகமைகள் சோதனைக்கு பிறகு எந்தெந்த நிறுவனங்களில் இருந்து பாஜகவுக்கு தேர்தல் நன்கொடை பத்திரங்கள் வந்திருக்கின்றன என்பன போன்ற விவரங்கள், தேர்தலுக்கு முன்பாக பொதுவெளியில் வந்து விடும் என்று அஞ்சுகிறார்கள். இதை மூடி மறைக்க முயற்சித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ஆகியோர் முழு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். இது சர்வாதிகார ஆட்சியா அல்லது ஜனநாயக ஆட்சியா என்பதை மக்கள் தேர்தலில் முடிவு செய்வார்கள். தேர்தல் பத்திர விவரங்களை பொதுவெளியில் விட்டால் யார் குற்றவாளி என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்” என்றார்